மதுராந்தகம், தாராபுரத்தில் இளம்வாக்காளர்களை வளைக்க சூடுபிடிக்கும் வலைத்தள பிரசாரங்கள்

இடைத்தேர்தலில் த.வெ.க. பாணி பிரசாரத்தை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளும் முன்னெடுத்துள்ளன.
மதுராந்தகம், தாராபுரத்தில் இளம்வாக்காளர்களை வளைக்க சூடுபிடிக்கும் வலைத்தள பிரசாரங்கள்
Published on
Summary

இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஆதரவை திரட்ட காரணம் த.வெ.க. செய்த சமூக வலைத்தள பிரசார தாக்கம் தான் என்று உறுதியாக நம்புகிறார்கள். தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் செய்த பிரசாரங்கள் இளைய தலைமுறையினரை எளிதில் சென்றடைந்தது. இதுவே அந்த கட்சியின் வெற்றிக்கு பாதை அமைத்து கொடுத்ததாக நம்புகிறார்கள்.

முறைப்படி 2031-ல்தான் சட்டமன்ற தேர்தலை சந்தித்து இருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராத விதமாக மதுராந்தகத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 69 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற மரகதம் குமரவேலும், அதேபோல் தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 81 ஆயிரத்து 100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற சத்தியபாமாவும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் இரு தொகுதிகளும் இடைத் தேர்தலை சந்திக்கின்றன.

த.வெ.க. கூட்டணி

இன்னொரு விசித்திரம் ஏற்கனவே வெற்றி பெற்ற அதே வேட்பாளர்கள் ஆளும் த.வெ.க. கூட்டணி வேட்பாளர்களாக மீண்டும் மக்களை சந்திக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் களத்தில் இருக்கிறார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் எதிர் பாராத ஆட்சி மாற்றத்தையும், அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தியது. எந்த விதமான அரசியல் கட்சி கட்டமைப்போ, தேர்தல் அனுபவமோ இல்லாத நிலையிலும் த.வெ.க. தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.

தி.மு.க

இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஆதரவை திரட்ட காரணம் த.வெ.க. செய்த சமூக வலைத்தள பிரசார தாக்கம் தான் என்று உறுதியாக நம்புகிறார்கள். தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் செய்த பிரசாரங்கள் இளைய தலைமுறையினரை எளிதில் சென்றடைந்தது. இதுவே அந்த கட்சியின் வெற்றிக்கு பாதை அமைத்து கொடுத்ததாக நம்புகிறார்கள். எனவே இந்த இடைத்தேர்தலில் த.வெ.க. பாணி பிரசாரத்தை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளும் முன்னெடுத்துள்ளன.

இளைஞர்கள் வாக்கு

இந்த 2 தொகுதிகளிலும் 18 வயது முதல் 39 வயது வரையிலான வாக்காளர்கள் கணிசமாக இருக்கிறார்கள். மதுராந்தகம் தொகுதியில் 92 ஆயிரத்து 567 பேரும், தாராபுரத்தில் 76 ஆயிரத்து 710 பேரும் இருக்கிறார்கள். அதாவது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் இளம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தள பிரசாரம்

எனவே அவர்களை கவர சமூக வலைத்தள பிரசாரங்களை எல்லா கட்சி வேட்பாளர்களும் கையில் எடுத்துள்ளார்கள். சட்டசபை தேர்தலின் போது சமூக ஊடகங்கள் மூலம் மக்களை சென்றடைவதில் ஏற்பட்ட பின்னடைவே தங்கள் வெற்றியை பாதித்ததாக ஒப்புக் கொண்ட தி.மு.க. இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட சமூக ஊடக பக்கங்கள் மூலம் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறது.

மதுராந்தகம் தொகுதி தி.மு.க. வேட்பாளர்

மதுராந்தகம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் இன்ஸ்டாகிராமில் 100 பதிவுகள் வரை வெளியிட்டுள்ளார். இதில் ரஜினியின் ஜெயிலர் திரைப் பட பின்னணி இசையுடன் கூடிய பிரசார வீடியோக்களும் அடங்கும். இளைஞர்களிடம் ஆதரவு கோருவது மற்றும் த.வெ.க. அரசின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனங்களையும் முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

அ.தி.மு.க. வேட்பாளர்

இந்த தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் கனிதா சம்பத்தும் இந்த டிஜிட்டல் பிரசாரத்தில் இறங்கி உள்ளார். அவரது புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்பவர்கள் குறைவாக இருந்தாலும் அதிக பாலோவர்களை கொண்டுள்ள உள்ளூர் சமூக வலைத்தள கணக்குகள் மூலம் தனது பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். அ.தி.மு.க.வில் வெற்றி பெற்று இப்போது த.வெ.க. வேட்பாளராக மக்களை சந்திக்கும் மரகதம் குமரவேல் முன்பை விட இப்போது சமூக ஊடகங்களில் அதிக கவனம் செலுத்துகிறார். இவரது பல வீடியோக்களை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்து இருக்கிறார்கள்.

தாராபுரம்

முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் தற்போது தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளராகவும் களம் இறங்கி இருக்கும் சத்திய பாமா தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி இருக்கிறார். கட்சிக்கும், வாக்களித்த மக்களுக்கும் துரோகம் இழைத்து விட்டதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பதில் அளித்து வருகிறார். அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதியும் கட்சி மாறியவர்தான் என்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவுக்கு முன்னாள் அமைச்சர் சாமிநாதன் சமூக ஊடக பிரசாரத்தை பொறுப்பேற்று நடத்துகிறார். பிரபலமான திரைப்பட பாடல்களை பின்னணியாக கொண்டு பிரசார வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். அதே நேரம் இளைஞர்களை கவரும் வகையில் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கான ஆதார காட்சிகளையும் சமூக ஊடக பிரசாரத்தில் பதிவேற்றி வருவதால் இளைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் வலைத்தள பக்கங்களை பார்க்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com