வெளியுறவு அமைச்சகத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து தலாய் லாமாவுக்கு டெல்லியில் பங்களா ஒதுக்கீடு!

தலாய் லாமாவின் அலுவலகமான காடன் ஃபோட்ராங் அறக்கட்டளைக்கு இந்தப் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
Dalai Lama
Published on: 
Summary

பண்டிட் ரவி சங்கர் சுக்லா சாலையில் அமைந்துள்ள இந்த டைப்-VII வகை பங்களா, வெளியுறவு அமைச்சகம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு லுட்யன்ஸ் டெல்லியில் உள்ள பண்டிட் ரவி சங்கர் சுக்லா சாலையில் ஒரு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பண்டிட் ரவி சங்கர் சுக்லா சாலையில் அமைந்துள்ள இந்த டைப்-VII வகை பங்களா, வெளியுறவு அமைச்சகம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. பொதுவாக இதுபோன்ற தங்குமிடங்கள் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றப்படும் நிலையில், நீட்டிப்பு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

காடன் ஃபோட்ராங் அறக்கட்டளை

தலாய் லாமாவின் அலுவலகமான காடன் ஃபோட்ராங் அறக்கட்டளைக்கு இந்தப் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. காடன் ஃபோட்ராங் அறக்கட்டளையின் இணையதளத் தகவலின்படி, தலாய் லாமா நிறுவனத்தையும் அவரது ஆன்மிகப் பணிகளையும் பாதுகாத்து முன்னெடுப்பதோடு, அவரது மனிதாபிமானக் கண்ணோட்டத்தை வளர்க்கவும் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

மனித விழுமியங்களை ஊக்குவித்தல், மத நல்லிணக்கத்தை வளர்த்தல், திபெத்திய கலாச்சாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைப் பேணுதல் மற்றும் பண்டைய இந்திய ஞானத்தை ஆழமாகப் புரிந்துகொள்வதை ஊக்குவித்தல் ஆகிய தலாய் லாமாவின் முக்கியக் கடமைகளுக்கும் இந்த அறக்கட்டளை ஆதரவளிப்பதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X