20 ஆண்டுகளில் இல்லாத கடும் மின்சார தட்டுப்பாடு: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வங்கதேசம்!

நாட்டில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் இன்றி மூடப்பட்டுள்ளன.
BANGALADESH POWER CRISIS
Published on

வங்கதேசத்திற்கு தேவையான மின்சாரத்தில் ஒரு பகுதியை இந்தியா ஏற்றுமதி செய்து வந்தபோதிலும், தற்போதைய சூழலில் இந்தியாவால் உடனடி முழு நிவாரணத்தையும் வழங்க இயலவில்லை.

வங்கதேச நாடு தன் வரலாற்றிலேயே சந்திக்காத அளவுக்கு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகக் கடுமையான எரிசக்தி மற்றும் மின்சார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நாட்டின் தலைநகரான டாக்கா முதல் கிராமப்புற மாவட்டங்கள் வரை தினமும் பல மணி நேரத் தொடர் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பணிகள் அனைத்தும் மின்சாரமின்மையால் முடங்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

டார்ச் வெளிச்சத்தில் அவசர சிகிச்சை

நாட்டின் பல மாவட்டங்களில் மின்சார விநியோகம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை அளிப்பதில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. பரிசால் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், தீவிர மின்வெட்டு காரணமாக மின் உற்பத்தி இயங்காத நிலையில், செவிலியர்களும் மருத்துவர்களும் செல்போன் டார்ச் மற்றும் டார்ச் லைட் வெளிச்சத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திகைப்பூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

எரிவாயு தட்டுப்பாடு

வங்கதேசத்தின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி இயற்கை எரிவாயுவைச் சார்ந்தே அமைந்துள்ளது. ஆனால், சமீபகாலமாக உள்நாட்டு எரிவாயு உற்பத்தி பெருமளவில் குறைந்ததோடு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவின் அளவும் முடங்கியுள்ளது. மேலும், ஜூலை மாதத்தில் மகேஷ்காளியில் உள்ள முக்கிய மிதக்கும் எரிவாயு முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதன் விளைவாக, நாட்டில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் இன்றி மூடப்பட்டுள்ளன. மின்சார மற்றும் எரிவாயு பற்றாக்குறை வங்கதேசத்தின் முதன்மை பொருளாதார ஆதாரமான ஆயத்த ஆடை துறையை கடுமையாக பாதித்துள்ளது. உற்பத்தி கோடிக்கணக்கில் தடைபட்டுள்ளதால், பல ஆலைகள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதுதவிர, உர ஆலைகள் மற்றும் இரும்புத் தொழிற்சாலைகளும் மின்வெட்டினால் முடங்கியுள்ளன.

இந்தியாவால் உடனடியாக உதவ முடியாதது ஏன்?

வங்கதேசத்திற்கு தேவையான மின்சாரத்தில் ஒரு பகுதியை இந்தியா ஏற்றுமதி செய்து வந்தபோதிலும், தற்போதைய சூழலில் இந்தியாவால் உடனடி முழு நிவாரணத்தையும் வழங்க இயலவில்லை. இந்தியாவின் அடானி மின் நிறுவனத்தின் கோடா மின் நிலையத்திலிருந்து வங்கதேசத்திற்கு வழங்கப்படும் மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பிற எல்லை கடப்பு மின் பரிமாற்ற எல்லை வரம்புகள் காரணமாக, கூடுதல் மின்சாரத்தை உடனடியாக வங்கதேசத்திற்கு அனுப்ப முடியாத தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

பொதுமக்களின் கொந்தளிப்பும் போராட்டங்களும் அதிகரித்து வரும் நிலையில், எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க வங்கதேச அரசு சர்வதேச அளவில் மாற்று வழிகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com