

புதுச்சேரியில் இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வெங்கட்டா நகர் 2வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வேளாண்துறை அதிகாரி வாசுதேவன் (68). இவரது மனைவி விமலா (55). இவர்களது மகள் யோகலட்சுமி (26).
யோகலட்சுமி, புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவத்தில் எம்.டி. இறுதியாண்டு படித்து வந்தார்.
நேற்று காலை யோக லட்சுமி தனது அறைக் கதவை திறக்காததால் அச்சமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது அவர் கட்டிலில் சடலமாக கிடந்துள்ளார்.
அவரது அருகே காலியான மயக்க மருந்து பாட்டில், சர்க்கரை நோய்க்கு போடக்கூடிய இன்சுலின் பாட்டில்கள் மற்றும் 3 ஊசிகளும் கிடந்தன.
தகவலறிந்து பெரியகடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், யோகலட்சுமி உடலில் மயக்க மருந்து மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்தை ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும் போலீசார் நடத்திய சோதனையில் யோகலட்சுமி அறையில் ஒரு டைரியில் அவர் எழுதிய கடிதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடிதத்தில், தற்கொலை முடிவை தானே எடுத்ததாகவும், இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம் என்றும் இந்த முடிவுக்காக பெற்றோர் மற்றும் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கல்லூரி தேர்வுக்கு தயாராகி வந்த யோகலட்சுமி, மிகவும் கடந்த சில நாட்களாக சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முந்தைய தினம் இரவு யோகலட்சுமி அவரது தாய், தந்தையுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் அவரது அறைக்கு தூங்கச்சென்றுள்ளார். ஆனால் மறுநாள் அவரின் சடலம் மட்டுமே பெற்றோருக்கு எஞ்சியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். தற்கொலை எண்ணங்கள், மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபட, உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரமும் செயல்படும்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம் செயல்படும்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019