

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் உதவும் கை வெள்ள நிவாரண மையத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் திறந்து வைத்தார்.
சென்னையில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் துணைநிற்க உதவும் கை என்ற மக்கள் நல முன்னெடுப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் தலா 3 பேர் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, களத்தில் நேரடியாக மக்கள் பணியாற்றுவர்
இந்த முன்னெடுப்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தந்து எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது
நேற்றைய தினம் ராகுல் காந்தி அவர்கள், தமிழ்நாட்டில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எனது ஆறுதல்கள். காங்கிரஸ் தலைவர்களும் தோழர்களும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவ வேண்டும்; உள்ளாட்சி நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றி முதியவர்கள், எளிய மக்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழகச் சகோதர, சகோதரிகளே நாங்கள் எப்போதும் உங்களுடன் துணை நிற்போம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது வழிகாட்டுதலின்படி, சென்னை சத்யமூர்த்தி பவனில் 24 மணி நேரமும் இயங்கும் வெள்ள நிவாரண உதவி மையமானது தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் மழை வெள்ள இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள முதலமைச்சர் விஜய் அவர்களின் அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், மக்களுக்கான இப்பணியில் காங்கிரஸ் கைகோர்த்து களத்தில் நிற்கிறது.
சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில், மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விரிவான களப்பணிக் குழு அமைக்கப்பட்டு நிவாரணப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன . உதவி தேவைப்படுவோர் மற்றும் நிவாரணப் பணிகளில் பங்களிக்க விரும்பும் தோழர்கள் / தன்னார்வலர்கள் 7871004668 | 8681004204 இந்த தொடர்பு எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி அவர்களின் வழிகாட்டுதலோடு, மக்களின் துயர் துடைக்க காங்கிரஸ் பேரியக்கம் என்றும் களத்தில் நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.