

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு உதவுமாறும், நிவாரண பணிகளில் ஈடுபடுமாறும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த மழையினால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது; மாநிலம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் வருந்துகிறேன். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களை சென்றடைந்து, அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுங்கள்; குறிப்பாக முதியவர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள். தமிழ்நாட்டில் உள்ள என் சகோதர சகோதரிகளே, நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம். பாதுகாப்பாக இருங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில், த.வெ.க. (TVK) தலைமையிலான கூட்டணி அரசில் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் சென்னையின் சில பகுதிகளும், பல தெற்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, சங்கரன்கோவில் பகுதியில் கடும் மழையினால் பெருமளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், இன்று (வியாழக்கிழமை) எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்குச் சென்று, பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையை எதிர்கொள்ள மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அவசரக்கால மீட்பு நடவடிக்கைகள், பல்வேறு மாவட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் நடைபெற்று வரும் நிவாரண பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.