அதிமுக அவை தலைவர் இபிஎஸ் தரப்பிற்கு ஆதரவு

அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதிமுக அவை தலைவர் இபிஎஸ் தரப்பிற்கு ஆதரவு
Published on

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ளது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி-சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்படுகிறது. அதில் வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து கொறடா உத்தரவை மீறியதால் வேலுமணி தரப்பினர் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் எடப்பாடி தரப்பினர் மனு அளித்தனர். இதேபோல் வேலுமணி தரப்பினரும் சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர்.

மேலும், கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கூறி 5-ல் இரண்டு பங்கு பேரிடம் கையெழுத்து பெற்று இருப்பதாக வேலுமணி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டி இருக்கிறார்.

இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பங்கேற்றார்.

அதிமுக பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் படைத்தவர் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன். பொதுக்குழுவை கூட்ட வேலுமணி கோரி வரும் நிலையில் தமிழ்மகன் உசேன் இபிஎஸ் தரப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com