

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் அர்லேகரை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சந்தித்தார். அப்போது, கலெக்டர் விவகாரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தல் மற்றும் புகாரளிக்க வந்தவரை தாக்கியதாக கூறப்படும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் மனு அளித்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தவெக எம்எல்ஏவால் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காத முதலமைச்சர் குற்றவாளிகள் பக்கம் நிற்கிறார்.
* குற்றமே நடக்கவில்லை என கூறிய அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை தேவை.
* ஜூலை 31-ல் பெண் கலெக்டர் புகாரளித்த நிலையில் தலைமைச்செயலாளர் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றாரா?
* வேறு மாவட்டத்திற்கு சென்று விடுங்கள் என கலெக்டரிடம் தலைமைச் செயலாளர் கூறி இருந்தால் அது குற்றத்தை மறைக்கும் முயற்சி.
* பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியிடம் தலைமை செயலாளர் பேரம் பேசி உள்ளார்.
* 116 நாட்களாக குற்றம் மூடி மறைக்கப்பட்டதா? முதலமைச்சர் மீதும் நடவடிக்கை தேவை.
* தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என மனு அளித்துள்ளேன்.
* தவெக ஆட்சியில் பெண் குழந்தைகள் மாயம் என்ற செய்தி தினசரி செய்தியாக மாறி விட்டது.
* முதலமைச்சர் குற்றவாளிகளை தண்டிப்பார் என பார்த்தால், அனைத்து எம்எல்ஏக்களை அழைத்து தீபாவளி பரிசு தந்து அனுப்பி உள்ளார்.
* தவெக ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதத்தில் 9 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
* செஞ்சி சிறுமியை விரைந்து கண்டுபிடிக்குமாறு கூறினால் அதற்கும் காவல் நிலையத்தில் யாகம் செய்கிறது தவெக அரசு.
* செக்காணூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணம் விவகாரத்தில் தற்கொலை என அரசு பொய் சொல்கிறது.
* போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் ஆளுங்கட்சியினரே சிக்குகின்றனர்.
* போதைப்பொருள் கடத்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு பெரிய நெட்வொர்க் உள்ளது.
* போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறையை விசாரிக்கவும் கோரி உள்ளோம்.
* திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறது.
* தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து டிஜிபி, தலைமைச்செயலாளரிடம் விளக்கம் கேட்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.