பட்டினப்பாக்க இடத்தேர்வுக்கான ஆய்வு விவரங்கள் இல்லை என பதிலளித்த தவெக அரசு - ஜோதிடர் ஆட்சியா? கனிமொழி கேள்வி

தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?
Kanimozhi mp
Published on: 

தமிழ்நாடு அரசு சார்பில், 15 மாடிகள் கொண்ட புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்க பட்டினப்பாக்கத்தில் சுமார் 26.36 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது.நிலத்தின் சில பகுதிகளை வைத்திருக்கும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஆகியவை தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கியிருந்தது.

இந்த நிலையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். குறிப்பாக அப்பகுதி மீனவ மக்கள் கருப்பு கொடி ஏந்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

பட்டினப்பாக்கம் பகுதியில் தொடர் எதிர்ப்புகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, அத்திட்டத்தை அங்கிருந்து மாற்றி, தற்போது பல்லவன் இல்லம் பகுதியில் 13.22 ஏக்கர் பரப்பளவு புதிய தலைமைச் செயலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பல்லவன் இல்லப் பகுதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டது குறித்த உரிய ஆய்வுகள் அல்லது அடிப்படை விவரங்கள் அரசிடம் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அப்படியென்றால் இடத்தை தேர்வு செய்தது யார் ?என்று திமுக எம்பி கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது.

அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?

என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com