தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது?- அரசை சாடிய அன்புமணி ராமதாஸ்

ஒரு மாநிலத்தில் நல்லாட்சி நடப்பதன் அடையாளம் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படுவதும், மக்கள் அச்சமின்றி நிம்மதியாக நடமாட முடிவதும் தான்.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
Published on: 
Summary

நெல்லை, சென்னை ஐஸ்ஹவுஸ், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறும் கொடூரக் கொலைகள், கத்திக்குத்து தாக்குதல்கள் காரணமாக மக்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் அதிகரித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதை சுட்டிக்காட்டி, காவல்துறை முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மக்கள் நிம்மதியாக வாழ கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நெல்லை டவுன் பகுதியில் மகிழுந்து நிறுத்துவது தொடர்பான மோதலில் இருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது?

நெல்லை டவுன் பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையிலான மோதலில் டால்டன், நிகோலஸ் என்ற இரு சகோதரர்கள் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர். ஐஸ்ஹவுஸ் பகுதியில் அஜித் என்ற இளைஞரைக் கொன்ற 4 பேர் கொண்ட கும்பல், அதைத் தடுக்க முயன்ற அஜித்தின் தாயாரையும் கத்தியால் குத்தியுள்ளது. அதேபோல், சேலத்தில் ஒரு மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவை அனைத்தும் தடுக்கப்பட்டிருக்க வேண்டிய படுகொலைகள் தான்.

ஒரு மாநிலத்தில் நல்லாட்சி நடப்பதன் அடையாளம் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படுவதும், மக்கள் அச்சமின்றி நிம்மதியாக நடமாட முடிவதும் தான். அதற்கு வழியில்லாவிட்டால், அந்த மாநிலத்தில் எத்தனை வசதிகள் இருந்தும் பயனில்லை. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்கும் போது மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? என்ற வினா தான் எழுகிறது.

தமிழகத்தில் காவல்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சட்டம்- ஒழுங்கை நிலை நிறுத்துவதும், அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் அவரது கடமை ஆகும். அதை உணர்ந்து தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com