தவெக அரசின் கையாலாகாத தனத்தால் தொடர்ந்து பறிபோகும் தமிழகத்தின் உரிமைகள்- தினகரன் சாடல்

இன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த நீர்ப்பாசனத் திட்டங்களையும் முடக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடும் அளவிற்குக் கர்நாடக அரசு துணிந்துள்ளது.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on: 
Summary

தமிழகத்தின் நீர்பாசனத் திட்டங்களை முடக்க கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதற்கு, தமிழக அரசின் செயல்திறனின்மையே காரணம் என தினகரன் குற்றம்சாட்டினார். காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் என்றும், கர்நாடக அரசின் நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அழிப்பதற்கான முயற்சி

தேசிய நதிநீர் இணைப்புத் தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றான காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் உட்பட, காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை அருகிலுள்ள ஏரிகளுக்குத் திருப்பிவிடும் சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டம், ராஜவாய்க்கால் வடிகால் நீர் பாசனத் திட்டம், நொய்யல் ஆற்றுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்குத் தடை விதிக்குமாறும், காவிரியின் குறுக்கே நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை இடித்து அகற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள கர்நாடக அரசின் நடவடிக்கையானது, தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயத்தை மட்டுமின்றி தமிழக மக்க்களின் வாழ்வாதாரத்தையும் அடியோடு அழிப்பதற்கான முயற்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

வெட்கக்கேடானது

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளின்படி, தமிழகத்திற்கான உரிமை நீரை உரிய காலத்தில் வழங்க மறுத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசு, தமிழகத்திற்கு சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட காவிரி நீரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்குப் பாடம் எடுப்பது வேடிக்கையானது மட்டுமல்ல; வெட்கக்கேடானதுமாகும்.

தமிழக விவசாயிகளின் நலனையும், மாநிலத்தின் நீராதார உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய தமிழக அரசும், அதன் முதலமைச்சர் விஜய் அவர்களும், ஆட்சி அதிகாரத்திற்காக கூட்டணிக் கட்சிகளின் தேவைக்காக ஒன்றன்பின் ஒன்றாக மாநிலத்தின் உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் அடகுவைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி, தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கியே தீருவோம் என்ற பிடிவாதத்துடன் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்கக்கூடத் துணிவில்லாத முதலமைச்சரைத் தமிழகம் பெற்றிருப்பதன் விளைவுதான், இன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த நீர்ப்பாசனத் திட்டங்களையும் முடக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடும் அளவிற்குக் கர்நாடக அரசு துணிந்துள்ளது.

அவசியம்

மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் என்ன ஆனது? இத்திட்டத்திற்காகத் தவெக ஆட்சியில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் என்னென்ன? திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? என்பன குறித்து தமிழக அரசும், அதன் நீர்வளத்துறையும் வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பருவமழைக் காலங்களிலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களிலும் கடலில் கலக்கும் உபரிநீரை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குத் திருப்பிவிடுவதற்கு மிகவும் அவசியமான இத்திட்டத்திற்கான பணிகளைத் துரிதப்படுத்திடுவதோடு தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயத்தையும் அழிக்கும் நோக்குடன் செயல்பட்டு வரும் கர்நாடக அரசின் முயற்சிகளை ஆரம்ப நிலையிலேயே சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும் என்றும் தவெக அரசையும், முதலமைச்சர் விஜய் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

X