

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அதிமுக கொண்டு வந்த பெரும்பாலான திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக தெரிவித்தார். அப்போது ஸ்டிக்கர் என்பதை குறிப்பிட வேண்டும். அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் வலியுறுத்தினார்.
பின்னர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது எனக் குற்றம்சாட்டின்னார்.
இது தொடர்பாக ராஜ்மோகன் பதில் அளிக்கையில் "எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது என்று அதிமுக உறுப்பினர் வேதனைப்பட்டு கூறினார். உடனே, நான் ஓடோடி சென்று, அதிகாரிகளை அழைத்து அதை காட்டச் சொல்லி கண்களால் பார்த்து வந்து பேரவைத் தலைவர் மூலம் தெரிவிக்கிறேன். ஒரு நொடி கூட நேரலையில் துண்டிக்கப்படவில்லை. நேரலையில் சென்று கொண்டிருக்கிறது. உங்களுடைய சிரித்த முகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்." என்றார்.
மீண்டும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெளியே மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது நேரலை துண்டிக்கப்பட்டதாக எங்களிடம் சொன்னார்கள். இங்கு பதிவு செய்யப்பட்டது. வெளியில் ஒளிப்பரப்பு செய்யப்படவில்லை என்பதுதான் நிதர்சமான உண்மை. இதை மறுக்கக் கூடாது" என்றார்.
இதற்கு சபாநாயகர் "நான் அவையில் இருந்து வெளியே சென்றபோது, இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டேன். ஒரு நிமிடம் கூட தடையில்லாமல் நேரலையாக சென்றது என்ற தகவலை எனக்கு தெரிவித்து இருக்கிறார்கள். சில வீடுகளில் பார்க்கும்போது தடை ஏற்பட்டிருக்கலாம். இங்கு இருந்து எந்தவொரு உத்தரவோ, தடையும் செய்யும் எண்ணமோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.