ஸ்டாலின் பிளான்.. புதிய டீம் போடும் திமுக - தேசிய அரசியலில் உருவாகிறது 3வது அணி? - கனிமொழி தூது சென்றதன் பின்னணி!

இக்கட்டான நேரங்களில் ஒருவரையொருவர் கைவிட்டுச் செல்பவர்கள் நாங்கள் அல்ல.
கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, ஸ்டாலின், அகிலேஷ், மம்தா
கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, ஸ்டாலின், அகிலேஷ், மம்தா
Published on
Summary

திமுக தேசிய அளவில் என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணிக்கு எதிராக மூன்றாம் அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சி அமைத்து விஜய் முதலமைச்சர் ஆகியுள்ளார்.

108 இடங்களில் வென்ற தவெக, திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், இரு இடதுசாரி கட்சிகள் ஆதரவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தங்கள் பக்கம் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட மேற்கூறிய கட்சிகள் தவெக வசம் சென்றதால், திமுக கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக தேசிய அரசியலில் இந்தியா கூட்டணியில் காங்கிரசுடன் பயணித்த திமுக தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு பக்கமும் செல்ல முடியாமல் உள்ளது.

2029 நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மூன்றாம் அணி

எனவே பாஜகவின் என்டிஏ, காங்கிரசின் இந்தியா கூட்டணியை தவிர்த்து மூன்றாம் அணியை உருவாக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. இதற்கான பேச்சுக்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றோடொன்று அதிகம் ஒட்டாமலேயே இருந்து வருகின்றன.

ஜம்மு காஷ்மீரில் ஆளும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மகாராஷ்டிராவில் சரத் பவார் என்டிபி, உத்தவ் சிவசேனா, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரனின் முக்தி மோர்ச்சா என இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் அதிகம் காங்கிரசோடு இணக்கம் காட்டாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. அத்தி பூத்தாற்போலவே இந்தியா கூட்டணி கூட்டம் நடக்கிறது.

இதுதவிர மேற்கு வங்கத்தில் தோல்வியுற்ற மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கம்பேக் கொடுக்க காத்து கிடக்கிறது. சட்டமன்ற தேர்தலில் தோற்றதனால் தேசிய அரசியலில் மம்தா கவனம் செலுத்த உள்ளதாக அண்மையில் வெளியான செய்தியும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது.

மம்தாவுக்கு காங்கிரஸ் எப்போதுமே வேப்பங்காய் தான். அதேபோல் கேரளாவில் தோல்வியை சந்தித்த பினராயி விஜயனின் சிபிஐஎம் அங்கு ஆட்சியை பிடித்த காங்கிரசுக்கு எப்போதும் எதிரணியே. இதுதவிர அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உள்ளது. அதுவும் காங்கிரஸ் - பாஜக இரண்டுக்கும் ஆகாது.

ஸ்டாலின் பிளான்

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக இருந்தபோது இந்தியா கூட்டணியில் முக்கியஸ்தராக செயல்பட்டார். அதேநேரம் பினராயி விஜயன், மம்தா பானர்ஜியோடும் நல்ல உறவை பேணினார். மேலும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா ஆகியோரும் ஸ்டாலினுக்கு நெருக்கம்.

அதுபோல கடந்த சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.

திமுக சட்டமன்ற தேர்தலில் தோற்றவுடன் காங்கிரஸ் அத்துக்கொண்டு சென்றதை விமர்சித்த அகிலேஷ் யாதவ், "இக்கட்டான நேரங்களில் ஒருவரையொருவர் கைவிட்டுச் செல்பவர்கள் நாங்கள் அல்ல" என எக்ஸ்சில் பதிவிட்டிருந்தார்.

இவ்வாறு முதல்வராக இருந்த சமயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலில் ஒரு முகத்தை சம்பாதித்து வைத்துள்ளார். தற்போது காலமும் காட்சியும் மாறிய சூழலில் அதுவே அவருக்கு கை கொடுக்கிறது.

கனிமொழி தூது

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்து பேசியதுதான் தற்போதைய டாக்.

மும்பையில், உத்தவ் தாக்கரேவை நேற்று முன்தினம், கனிமொழி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நீடித்தது. மேலும், சரத்பவார் மற்றும் அவரது மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரை, டெல்லியில் கனிமொழி சந்தித்து பேசினார்.

தொகுதி மறுவரையரை, மூன்றாவது அணி உருவாக்குவது ஆகியவை குறித்து கனிமொழி தாக்கரேவிடம் பேசியதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

அடுத்தகட்டமாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரான பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அகிலேஷ் யாதவையும் கனிமொழி சந்திக்க உள்ளார். அகிலேஷின் மனைவியான லோக்சபா எம்.பி., டிம்பிள் யாதவ், கனிமொழியின் நெருங்கிய தோழி ஆவார். அடுத்ததாக மம்தா பானர்ஜியையும் சந்திக்க உள்ளார்.

திமுக தலைமையில் டீம்

இதன்மூலம் காங்கிரசுடன் முரண்பாட்டில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளையும், என்டிஏ - இந்தியா கூட்டணி என இரண்டிலும் இல்லாமல் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஸ்டாலின் தலைமையில் மூன்றாம் அணி போடுவதே திமுகவின் மாஸ்டர் பிளான் என அரசியல் நோக்கர்கள் நினைக்கின்றனர்.

இதற்கான அச்சாரமே கனிமொழி மேற்கொண்ட சந்திப்புகள் எனலாம். இது தேசிய அளவில் தற்போது பேசுபொருளாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com