சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடல்

பொதுமக்கள் அச்சமடையாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Thiruvalluvar statue in kanyakumari
Published on: 
Summary

குமரி மாவட்டத்துக்கு அதிமிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா தலங்கள் இன்று முதல் மூடப்படுகிறது. மீன வர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

குமரி மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் அதிமிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சமடையாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடலில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் சீற்றமும் அலைகளின் தாக்கமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு அமைப்புகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்திருக்க வேண்டும். மேலும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, ஆபத்தான இடங்களில் நின்று அலைகளை பார்க்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாதலங்கள் மூடல்

கனமழை மற்றும் கடல் சீற்றத்தால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், அணைகள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக, திற்பரப்பு நீர்வீழ்ச்சி, வள்ளிச்சுனை நீர் வீழ்ச்சி, காளிகேசம், உலக்கை அருவி, களியல் அருகே உள்ள இரட்டை அருவி, மாத்தூர் தொட்டி பாலம் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், லெமூர் கடற்கரை, முட்டம், தேங்காப்பட்டணம், சொத்தவிளை, குளச்சல் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் யாரும் நுழையாத வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

விவசாயிகள் தங்களது பயிர்கள், அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்கள், உரங்கள் மற்றும் வேளாண் உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து பாதுகாக்க வேண்டும். மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள வயல்களில் பணியாற்றும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகள், நீர்நிலைகளின் கரையோரங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஆறுகள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அவற்றை கடக்கவோ, நீரில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. மலைப்பகுதிகளில் கனமழையின்போது மண் சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் சிற்றோடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். எனவே, மண் சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளிலும் நீர்நிலைகளின் அருகிலும் வசிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நேரங்களில் தேவையற்ற இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும்.

மின்கம்பிகளை தொடக்கூடாது

கனமழையால் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுவதுடன், மின்கம்பிகளும் அறுந்து விழ வாய்ப்புள்ளது. எனவே, அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை பொதுமக்கள் தொடக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால், மின்வாரியத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1912-க்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவின் அவசரகால கட்டுப்பாட்டு அறை அனைத்து துறைப் பணியாளர்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இங்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.

மின்சாரம் தொடர்பான புகார்களை பெறுவதற்காக மின்வாரியத்திலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் வானிலை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com