தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்: நாம் அனைவரும் ஒரே குரலாக இருக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது நமது தாய்மொழிக்கான மரியாதை; யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல.
சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.
சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.
Published on: 

தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவளிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

தி.மு.க. வை தொடர்ந்து அ.தி.மு.க.வும் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

தமிழர்கள் உணர்வு

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழியின் தொன்மை, பண்பாட்டின் அடையாளம். 1981-ல் மதுரையில் 5-வது தமிழ் மாநாட்டை நடத்தியவர் எம்ஜிஆர். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனம், அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படுவது தமிழர்கள் உணர்வு. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது நமது தாய்மொழிக்கான மரியாதை; யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழன்னைக்கான மரியாதை. தமிழுக்கு நாம் செலுத்தும் மரியாதை, தேசப்பற்றும் மொழிப்பற்றும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. இந்தியர் என்பதில் நாம் பெருமை அடைகிறோம், தமிழர் என்பதில் அதே அளவுக்கு பெருமை அடைகிறோம். அரசியலில் நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம், தமிழ் என்று வரும் போது நாம் அனைவரும் ஒரே குரலாக இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவளிப்பதாக கூறினார்.

முன்னதாக, தனித்தீர்மானத்தை கொண்டு வந்த போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-

இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி; தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது?. தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் அன்பு... தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர். ஒரு பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது தமிழ்தான். தமிழ் நமது நாகரிகம், பண்பாடு ஒட்டு மொத்த உயிர் மூச்சு.

தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com