

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். இவரின் மறைவுக்கு திமுக எம்பி கனிமொழி, நாதக ஒருங்கிணைப்பாளார் சீமான், நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
பிரபல சமையல் கலைஞரும் தொலைக்காட்சி பிரபலமும்மான தாமு அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமையல் கலையில் தனக்கெனத் தனித்துவமான முத்திரையைப் பதித்து, தனது திறமையாலும், உழைப்பாலும், எளிமையான அணுகுமுறையாலும் மக்களின் அன்பைப் பெற்ற சமையல் கலைஞர் தாமு அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
சமையல் கலையில் முனைவர் பட்டம் பெற்று, சமையல் கலையை வெறும் தொழிலாக மட்டுமல்லாமல், ஓர் உயரிய கல்வியாகவும், கலையாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருடைய பங்களிப்பு போற்றுதலுக்குரியது. தனது தனித்திறமையால் சமையல் துறையில் தனி அடையாளத்தை உருவாக்கிய அவரது மறைவு, சமையல் கலை உலகிற்குப் பேரிழப்பாகும்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமையல் கலைத் துறையைச் சார்ந்த அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
புகழ்பெற்ற சமையல் கலைஞர் செஃப் தாமு அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
கின்னஸ் உலக சாதனை படைத்த கலைஞரின் மறைவு சமையல் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் ; பல்வேறு தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்று, தனது அன்பான பேச்சாலும், நகைச்சுவை உணர்வாலும் பங்கேற்பாளர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்தவர்.
தனது தனித்துவமான சமையல் திறமையால், எண்ணற்ற இல்லங்களில் சமையல் கலை மீது ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன், தனது சமையல் குறிப்புகள் மற்றும் சாதனைகள் வாயிலாக மக்கள் மனங்களில் என்றும் வாழ்வார்.
அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார், உறவினர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.