துவரம் பருப்பு, உளுந்து இருப்புக்கு புதிய கட்டுப்பாடுகள் - செயற்கை தட்டுப்பாட்டை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை

கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பு சராசரியாக ரூ.134.23-க்கு விற்பனையானது.
துவரம் பருப்பு - உளுந்து
Published on: 
Summary

தமிழகத்தில் துவரம் பருப்பு, உளுந்து இருப்புக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பருப்பு வகைகள் விலை உயர்வு

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நாட்டிலேயே தமிழகத்தின் சில்லறை பணவீக்கம் அதிகமாக பதிவாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின் சில்லறை பணவீக்கம் 6.81 சதவீதமாக இருந்தது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு 10.62 சதவீதமாக இருந்தது. இதனால் பொதுமக்களின் குடும்பச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக பருப்பு வகைகளின் விலை உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பு சராசரியாக ரூ.134.23-க்கு விற்பனையானது. இதே காலத்தில் நாடு முழுவதும் அதன் சராசரி விலை ரூ.124.41 ஆக இருந்தது. இதன்படி, தேசிய சராசரியைவிட தமிழகத்தில் துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.9.82 அதிகமாக இருந்தது. அதன்பிறகும் விலை குறையவில்லை. கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.143 ஆகவும், உளுந்து ரூ.128 ஆகவும் விற்பனையானது.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.153.43 ஆகவும், உளுந்து ரூ.139.67 ஆகவும் விற்பனையாகிறது.

தமிழக அரசு கோரிக்கை

பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், வியாபாரிகள் அதிக அளவில் பருப்புகளை வாங்கி பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதை தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக துவரம் பருப்பு, உளுந்து, அரிசி, சமையல் எண்ணெய், வெங்காயம் ஆகியவற்றுக்கு இருப்பு வரம்பு விதிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியது.

மத்திய அரசு ஒப்புதல்

இந்த கோரிக்கையை மத்திய நுகர்வோர் விவகாரத்துறை பரிசீலித்து, தற்போது துவரம் பருப்பு மற்றும் உளுந்துக்கு மட்டும் இருப்பு வரம்பு விதிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, மொத்த விற்பனையாளர்கள் துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றில் ஒவ்வொன்றையும் அதிகபட்சம் 200 டன் வரை மட்டுமே இருப்பு வைத்திருக்க முடியும். சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொரு வகை பருப்பையும் அதிகபட்சம் 5 டன் வரை மட்டுமே இருப்பு வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் வியாபாரிகள் அதிக அளவில் பருப்புகளை வாங்கி வைத்துக்கொண்டு, சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை உயர்த்துவதை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பருப்பு ஆலைகளுக்கு வேறுபட்ட முறையில் இருப்பு வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 3 மாதங்களின் சராசரி செயலாக்கத்திறன் அல்லது ஆண்டு செயலாக்கத் திறனில் 25 சதவீதம் ஆகியவற்றில் எது அதிகமோ, அந்த அளவு பருப்பு இருப்பு வைத்திருக்க அனுமதிக்கப்படும். இதனால் பருப்பு ஆலைகளின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படாமல், அதிகப்படியான இருப்பு வைக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியும்.

ஒப்புதல் இல்லை

வெளிநாடுகளில் இருந்து துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சரக்கு நாட்டுக்கு வந்தடைந்த பிறகு. 45 நாட்களுக்கு மேல் பருப்பை இருப்பு வைக்கக்கூடாது.

இதன் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பருப்புகளை நீண்ட காலம் பதுக்கி வைத்து சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதையும் விலையை உயர்த்துவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பருப்பு வகைகள் மட்டுமின்றி, அரிசி, சமையல் எண்ணெய், வெங்காயம் ஆகியவற்றுக்கும் இருப்பு வரம்பு விதிக்க தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. ஆனால், வெங்காயத்தின் விலை தமிழகம் உள் பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது குறைந்து வருகிறது. எனவே, வெங்காயத்துக்கு இருப்பு வரம்பு விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல், அரிசி மற்றும் சமையல் எண்ணெய்க்கு இருப்பு வரம்பு விதிப்பதற்கும் மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

X