

தமிழக நெடுஞ்சாலைத்துறையின் இந்தி பெயர் பலகைகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின், த.வெ.க. அரசை கடுமையாக எச்சரித்து, இருமொழிக் கொள்கையை மதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தமிழக மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் ஊரின் பெயிர்கள் இந்தியில் இருந்ததால் சர்ச்சை எழுந்தது. தமிழ்நாடு அரசு பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டிருந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் இந்தியில் ஊர் பெயர்கள் இருந்ததால் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இதுவரை மத்திய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.
தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்! என்று கூறியுள்ளார்.