

நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான பர்செண்டேஜை குறைத்திருப்பார்கள். ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளது. இது நம்முடைய மூன்றாண்டுகால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
உணர்ச்சி வசப்படாமல், தொலைநோக்குப் பார்வையுடன் தொகுதி மறுவரையறை பிரச்சனையை நாம அணுகியுள்ளோம்.
தொகுதி மறுவரையறை மசோதா திரும்ப கொண்டு வரப்படும் போது தி.மு.க. என்ன நிலைப்பாடு எடுக்கும் என்று தான் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுக்க பேசப்பட்டு வந்தது. அதற்கான தெளிவான பதிலை நேற்று நாம் கொடுத்துள்ளோம்.
தொகுதி மறுவரையறை என்ற ஒரு ஆபத்து வர உள்ளது, இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என இந்தியாவிலேயே முதன் முதலாக எச்சரிக்கை மணி அடித்தது நாம் தான். இது பற்றிய விழிப்புணர்வை எல்லாருக்கும் ஏற்படுத்தினோம். இந்திய அளவில் தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தினோம்.
கடந்த ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் காலத்தில், நம் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், ஒருதலைப்பட்சமாக, எந்த உறுதியும் கொடுக்காமல் ஒரு மர்ம மசோதாவை கொண்டு வந்தார்கள். படித்து பார்க்க கூட உரிய கால அவகாசம் தராமல் அவசரமாக கொண்டு வந்த அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம்.
பாஜகவுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தோம். தற்போது இருக்கும் தொகுதி எண்ணிக்கையே தொடரலாம் என நாம விரும்பினாலும், தவிர்க்க முடியாத அரசியல் சாசன விதிப்படி தொகுதிகளை அதிகரிக்கும் போது , அதில் தமிழ்நாடு பாதிக்கப்பட கூடாது என ‘practical’-ஆன தீர்வை 2024-ஆம் ஆண்டே நாம் சட்டமன்ற தீர்மானம் மூலமாக முன்வைத்தோம்.
நாம் மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரித்துவிட்டு, நமக்கான பர்செண்டேஜை குறைத்திருப்பார்கள். ஆனால், இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது. அதில் நாம் முன்வைத்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுமே இடம்பெற்றுள்ளது. இது நம்முடைய மூன்றாண்டுகால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
தற்பொழுது மட்டும் நாம் இந்த முடிவை எடுக்கவில்லை எனில், 1971-ஆம் ஆண்டு சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடைபெறுவதற்கு பதிலாக, கடைசியாக எடுத்த சென்சஸ் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கையை மாற்றி அமைத்துவிடுவார்கள். அது தமிழ்நாட்டிற்கு பேராபத்தாகிவிடும். அதை நாம் தடுத்துவிட்டோம். நாம் எதிர்பார்த்த மாதிரியே இந்த மசோதா வந்துள்ளது.
நம்மை பொறுத்தவரை, நாம் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளிலும் நாம் தற்போது வரை உறுதியாக உள்ளோம். தமிழ்நாட்டின் நலன் பறிபோக கூடாது, அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதில், நம் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளோம். 1967 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது 42-ஆக இருந்த தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளை 39-ஆ குறைத்தார்கள். ஆனால், தற்போது நம்முடைய பர்செண்டேஜில் எந்த மாற்றமும் இல்லாமல், நமக்கான தொகுதிகள் உயர்வதை உறுதி செய்துள்ளோம்.
நம்முடைய கடமைய நாம செய்துள்ளோம். இதை எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். நாடாளுமன்ற கூட்ட தொடரில் நம் நிலைப்பாட்டை ஓங்கிச் சொல்லுங்கள். கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்வதில் தயக்கம் கூடாது.
எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பதை சரியாகத் தீர்மானிக்க வேண்டும் என தலைவர் கலைஞர் சொல்லியிருக்கிறார். அதன்படி நடந்துகொள்ளுங்கள் என்று பேசினார்.