

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 விலை உயர்வு அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, கிளப்கள், நட்சத்திர விடுதிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மது பாட்டில்களை பொதுவெளிகளில் வீசிச் செல்வதால் ஏற்படும் சுற்றுச்சுழல் பாதிப்பை தடுக்கும் வகையில், ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் மதுபான விற்பனையின்போது, பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்து விட்டு, பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது 10 ரூபாயை திரும்ப வழங்கப்படும்.
இதுதொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆணையர் சுற்றறிக்கை பிறப்பித்தார். அந்த சுற்றறிக்கையின் அடிப்படையில், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல செஸ் வரியாக, நவ.1-ந்தேதி முதல் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதை எதிர்த்து, டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்யும், எம் எல்-2, எப்எல்-3 உரிமம் பெற்றுள்ள கிளப்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறையை நிறுத்தி விட்டு, மதுபானத்தின் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை 10 ரூபாய் அதிகரித்து, கடந்த அக்டோபர் 29-ந்தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல காலி பாட்டில்களைத் திரும்பப் பெறவும், 10 ரூபாயை திரும்ப வழங்கவும் ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்களை நிறுவவும் அரசு முடிவு செய்துள்ளது.
கிளப்களில் வாங்கும் மதுபான பாட்டில்களை உறுப்பினர்கள், வீடுகளுக்கு எடுத்துச் சென்றால் காலி பாட்டில்களை திரும்பப் பெறுவது இயலாது. இதனால், பாட்டில்களை டாஸ்மாக் நிறுவனத்திடம் வழங்க முடியவில்லை. இந்த சிரமங்களை கருத்தில் கொள்ளாமல் மதுவிலக்கு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுற்றுச்சூழல் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் கிளப்கள், நட்சத்திர விடுதிகளின் வர்த்தகம் பாதிக்கப்படும். கிளப்களுக்கு செஸ் வரி விதிக்க முடியாது என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.