மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்!- இபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம்

ஆட்சியமைத்த சில மாதங்களிலேயே அனைத்து நிலைகளிலும் தோல்வி அடைந்த அரசாக இந்த அரசு மாறி இருக்கிறது.
Edappadi pazhanisamy
Published on: 

அதிமுகவின் 55-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.

அவர் அதில் கூறி இருப்பதாவது;

என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!

இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற பிறகு, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி கோலோச்சிய காலகட்டத்தில், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான அரசியல் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர் பேரறிஞர் அண்ணா.

மாநில உரிமைகளை உயர்த்திப் பிடித்து, சமூக நீதியை நிலைநாட்டி, சாமானிய மக்களின் நலனைக்காக்கும் நல்லரசை நிறுவிய பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு, அவர் உருவாக்கிய இயக்கத்தைக் கபளீகரம் செய்து, அண்ணாவின் இதயக்கனியாகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையே இயக்கத்தில் இருந்து வெளியேற்றியது தீயசக்தி.

அந்தத் தீய சக்தியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும்; அண்ணா வின் லட்சியங்களை நிலை நாட்டவும்; கோடானு கோடி மக்களின் பேராதரவோடு, 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் நாள் "அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கினார் நம் "பொன்மனச் செம்மல்" புரட்சித் தலைவர்.

1977-ம் ஆண்டு முதன் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற நம் கழகம், புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சியில் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது.

புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பிறகு, அ.தி.மு.க.வை கட்டிக் காத்த புரட்சித் தலைவி அம்மா, தொட்டில் குழந்தைத் திட்டம், 69 விழுக்காடு இட ஒதுக் கீட்டிற்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பு, அம்மா உணவகம், மாணவர்களுக்கு விலை யில்லா மடிக் கணினிகள் என எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி, “அமைதி! வளம்! வளர்ச்சி!” என்ற தாரக மந்திரத்தின்படி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார்.

புரட்சித் தலைவி அம்மாவின் மறைவிற்குப் பிறகு, நம் கழகத்தைச் சூழ்ந்த சோதனைகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் மத்தியில், உங்களின் பேராதரவோடும், தமிழக மக்களின் நம்பிக்கையோடும், முதலமைச்சராகப் பதவியேற்று, அம்மாவின் நல்லாட்சியைத் தொடர்ந்து நடத்தும் பெரும் வாய்ப்பைப் பெற்றேன்.

அந்தப் பதவியை, மக்கள் பணியாற்றக் கிடைத்த மகத்தான வாய்ப்பாகக் கருதி, புரட்சித் தலைவி

அம்மாவின் வழியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினோம். அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்ற ஏழை, எளிய மாணாக்கர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை வழங்கினோம்.

அதன் பயனாக இன்றைக்கு ஆயிரக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் மருத்துவர்களாக உருவாகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், 17 புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம். மக்களின் குடிநீர்த் தேவை களை நிறைவேற்ற ஏராளமான கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடிமராமத்துப் பணிகளை முன்னெடுத்தோம்.

மெட்ரோ ரெயில் திட்டங்கள், சாலை விரிவாக்கப் பணிகள், உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் என தமிழகத்தின் வளர்ச்சிக்காக நாம் தொடங்கிய பல்வேறு திட்டங்களுக்கு, இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது பெயரை ஒட்டிக்கொண்டு உரிமை கொண்டாடும் அளவிற்கு, நம் கழக ஆட்சியில் மகத்தான சாதனைகளை நிகழ்த்திக் காட்டினோம்.

இத்தகைய பெருமைமிக்க சாதனைகளையும், அரை நூற்றாண்டுக்கும் மேலான தியாக வரலாற்றையும் கொண்ட நம் கழகத்தை, எத்தனையோ எதிரிகளும் துரோகிகளும் அழித்துவிடத் துடித்தபோதும், என் உயிரினும் மேலான எனதருமை கழகத் தொண்டர்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் அசைக்க முடியாத பேராதரவோடு, அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து கழகத்தை மீட்டெ டுத்து, கம்பீரமாக வீருநடை போடச் செய்திருக்கிறோம்.

அதற்குச் சான்றாகத்தான், 2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அசாதா ரணமான அரசியல் சூழ லிலும், கவர்ச்சி அரசியலின் மாயத் தோற்றங்கள் மேலோங்கிய நிலையிலும், அவற்றையெல்லாம் கடந்து, கழகக் கூட்டணி சுமார் ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் மக்களின் வாக்கு களைப் பெற்றதுடன், நம் கழகம் 47 சட்டமன்ற உறுப்பி னர்களை வென்றெடுத்து, தனது அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

கவர்ச்சி அரசியல் என்பது நீர்க்குமிழியைப் போன்றது! அது எந்த நேரத்திலும் உடைந்து சிதறிவிடும்! ஆனால், கொள்கையாலும், தியாகத்தாலும் கட்டமைக் கப்பட்ட நம் கழகம், காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் மக்கள் பேரியக்கம்.

கவர்ச்சி அரசியலால் மக்களை ஏமாற்றி, குதிரை பேர அரசியலின் துணை யோடு தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள், ஜனநாய கத்தின் மாண்புகளைப் படுகுழியில் தள்ளியதோடு, ஏழை, எளிய மக்களின் வாழ் வாதாரத்தையும் கேள்விக் குறியாக்கி இருக்கிறார்கள்.

ஆட்சியமைத்த சில மாதங்களிலேயே அனைத்து நிலைகளிலும் தோல்வி அடைந்த அரசாக இந்த அரசு மாறி இருக்கிறது. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைவிட, அ.தி.மு.க.வை எவ்வாறு பலவீனப் படுத்தலாம்; அதன் சட்டமன்ற உறுப்பினர்களை எவ்வாறு குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்கலாம்; நம் இயக்கத்தை எவ்வாறு விழுங்கிவிடலாம் என்பதிலேயே ஆட்சியாளர்கள் முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள்!

அவர்களுக்கு ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நம் கழகம் அதிகாரத்திற்காக ஒன்றுகூடிய கூட்டமல்ல! அது லட்சியத்தால் ஒன்றி ணைந்த இயக்கம்.

நம் தொண்டர்கள் புரட்சித் தலைவரின் பாசறையில் பயின்றவர்கள்! புரட்சித் தலைவி அம்மாவின் அரசியல் போர்க்களத்தில் புடம் போடப்பட்டவர்கள்! எத் தனை சோதனைகள் வந்தாலும் துவளாதவர்கள்! எத்தனை சூழ்ச்சிகள் அரங் கேறினாலும் வீழாதவர்கள்.

அத்தகைய லட்சிய உறுதி மிக்க தொண்டர்களில் ஒரு வனாக, உங்களோடு ஒருவ னாக, உங்களின் பேரன்பை யும் பெருநம்பிக்கையையும் பெற்றுத்தான், இன்று இந்த மாபெரும் மக்கள் பேரி யக்கத்தின் `பொதுச் செயலாளர்’ எனும் பெரும் பொறுப்பை ஏற்றுப் பணி யாற்றி வருகிறேன்.

எனக்கு கழகம் வேறு; தொண்டர்கள் வேறு அல்ல! கழகமே எனது உயிர்மூச்சு! கழகத் தொண்டர்களே எனது உயிர்நாடி. என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே.

புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி அம்மா வின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அ.தி.மு.க. 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ம் ஆண்டில் அடி யெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன் பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

“இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் புரட்சித் தலைவி அம்மா முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!

இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகி களையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட என் அன்பிற் குரிய கழகத் தோழர்களே! புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே.

இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதி யோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்!

புரட்சித் தலைவர் காட்டிய பாதையில்! புரட்சித் தலைவி அம்மா வகுத்துத் தந்த லட்சிய வழியில்! தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்! தர்மம் வெல்லும்! தீய சக்திகள் வீழும்! சோதனைகள் மறையும்! சாதனைகள் தொடரும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com