த.வெ.க. அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது - கனிமொழி

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
Kanimozhi
Published on: 
Summary

மாற்றுக் கட்சியினரை ஒடுக்குவதில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து முறையான ஆட்சியை தவெக அரசு நடத்த வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் செல்லும் பாதையில் சாலை மறியலில் ஈடுபட்டது, காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட புகார்களின் கீழ், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த கார்த்திகாவை கோவையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தாராபுரம் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

​மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் காந்தி உள்ளிட்ட மொத்தம் 6 பேரை கைது செய்த தாராபுரம் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், கழக ஆட்சியில் ஜனநாயக வழியிலேயே அவர்கள் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், த.வெ.க. அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு என நாள்தோறும் மக்கள் இன்னலுக்குள்ளாகும் வேளையில், மாற்றுக் கட்சியினரை ஒடுக்குவதில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து முறையான ஆட்சியை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com