மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்று கொண்டாடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், முதலமைச்சர் விஜய் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம் என்று திமுக தெரிவித்துள்ளது . இது குறித்து திமுக தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு உரிய நாளா? நிச்சயமாக ஆம். ஆனால், தமிழ்நாட்டின் மொழி, இன, பண்பாட்டு அடையாளத்தைப் போற்றும் தனித்துவமான ‘தமிழ்நாடு நாள்’ அதுதானா? என்பதே அடிப்படையான கேள்வி.
இது வெறும் தேதியைப் பற்றிய விவாதமல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளத்தையும் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எத்தகைய வரலாற்று உணர்வைக் கடத்துகிறோம் என்பதற்கான விவாதம்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன. தனி ஆந்திர மாநிலத்திற்காக உண்ணாவிரதம் இருந்து 1952 டிசம்பர் 15-ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்தார். தொடர்ந்து எழுந்த போராட்டங்களால் 1953 இல் ஆந்திர மாநிலம் உருவானது. 1956 நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தது.
இதனால் சென்னை மாநிலத்தின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகள் புதிய வடிவம் பெற்றன.
'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் போற்றிய தமிழ்மொழியின் வரலாற்றுப் பரப்பையும், 1956 இல் வரையறுக்கப்பட்ட அரசியல் எல்லைகளையும் ஒன்றாகக் கருதிவிட முடியாது.
மொழிவாரி மறுசீரமைப்பின்போது தமிழர்கள் உரிமை கோரிய சில பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணையவில்லை. அதேவேளையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன
இந்த எல்லைப் போராட்டங்கள் வெறும் நிலப்பரப்புக்கானவை அல்ல. மொழியுரிமை, அடையாளம், மக்களின் விருப்பம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள். உயிர்நீத்தவர்களையும், சிறை சென்றவர்களையும், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்தான் நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்.
அண்டை மாநில மக்களின் மொழியுரிமையை மதிப்பதும் நமது மொழியுரிமையை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.
ஆனால், மொழிவாரி மாநிலங்களின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட நாளும், ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காகத் தமிழர்கள் மேற்கொண்ட நீண்ட போராட்டம் வெற்றி பெற்ற நாளும் ஒன்றா?நிச்சயமாக இல்லை.
‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றித் தமிழர்களின் மொழிக்கும் பண்பாட்டிற்கும் உரிய ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழறிஞர்களும் அரசியல் இயக்கங்களும் போராடின.
அந்தக் கோரிக்கைக்காக 1956 ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அக்டோபர் 13-ஆம் நாள் உயிர்நீத்தார் தியாகி சங்கரலிங்கனார். ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும் பல்வேறு இயக்கங்களும் இக்கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்தனர்.
அந்த நீண்ட போராட்டத்தின் வரலாற்றுத் திருப்புமுனையாக, *1967 ஜூலை 18-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை, சென்னை மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.* தொடர்ந்து சட்ட நடைமுறைகள் நிறைவேறி, 1969 ஜனவரி 14 முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
ஜூலை 18 ஒரு கட்சியின் ஆட்சிச் சாதனையை மட்டும் குறிக்கும் நாளல்ல. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்திற்கும், தமிழறிஞர்களின் போராட்டத்திற்கும், தமிழ் மக்களின் மொழி உணர்விற்கும், பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் முன்னெடுப்பிற்கும் கிடைத்த அங்கீகாரத்தின் நாள்.
நவம்பர் 1 — மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் நினைவுகூரும் நாள்.ஜூலை 18 — தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் தமிழ்நாடு நாள்.
இது ஒரு கட்சியை ஆதரிப்பதற்கோ மற்றொரு கட்சியை எதிர்ப்பதற்கோ அல்ல; தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாடு.
தமிழ்நாட்டின் பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரையும், போராடிய தமிழுணர்வாளர்களையும், பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணாவையும் நினைவுகூரும் நாளை உரிய இடத்தில் நிலைநிறுத்துவோம்.
நவம்பர் 1-ஐப் போற்றுவோம்; ஜூலை 18-இன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்.வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்தமிழ்நாடு நாள் — ஜூலை 18 மட்டுமே
என்று குறிப்பிட்டுள்ளனர்