தமிழ்நாடு தினம்: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

நாட்டின் வளர்ச்சிக்குத் தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது.
President Murmu-Prime Minister Modi
Published on: 
Summary

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் தனித்துவம், பண்பாடு மற்றும் பாரம்பரியம் குறித்து எப்போதும் பெருமிதம் கொள்வதாகக் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு தினம் நவம்பர் 1 இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் தனித்துவமான கலாச்சாரம், கடின உழைப்பு மற்றும் நாட்டின் நாகரிகப் பயணத்திற்குத் தமிழகம் வழங்கும் பங்களிப்புகளைப் போற்றும் வகையில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி மாநில மக்களுக்குத் தங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உருவாக்க நாளில் அந்தப் பகுதி மக்களுக்குரிய மனமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கியுள்ளார். வளமான கலாச்சாரப் பாரம்பரியமும் பன்முகத்தன்மை கொண்ட மரபுகளும் விளங்கும் இந்த மாநிலங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்பகுதிகளில் வாழும் மக்களின் நல்வாழ்வு மற்றும் எதிர்காலச் செழிப்புக்காகத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பிரத்யேக வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். தொழில் முனைவோடு கடின உழைப்பையும் இயல்பாகக் கொண்ட தமிழக மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்குச் செய்துள்ள பங்களிப்புகள் மகத்தானவை என்று அவர் பாராட்டியுள்ளார். உற்பத்தித் துறை தொடங்கி, வாகனத் தயாரிப்பு, ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளித் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் நவீன வளர்ந்துவரும் பல்வேறு தொழில்துறைகள் வரை தமிழகம் தனித்துவமான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்துறை சிறப்புகளுடன் தலைநிமிர்ந்து நிற்பதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் தனித்துவம், பண்பாடு மற்றும் பாரம்பரியம் குறித்து எப்போதும் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நீண்ட நாகரிகப் பயணத்தை பல்வேறு வழிகளில் செழுமைப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சிறப்புமிக்க தமிழ்நாடு தினம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றும், எதிர்வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் புதிய வாய்ப்புகளையும் வாரிக் வழங்கட்டும் என்று அவர் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

X