கூட்டணிகள் பிரிவதும், புதிய கூட்டணிகள் உருவாவதும் இயல்பானதுதான்- ஜோதிமணி

மு.க.ஸ்டாலின் அவர்களே தோல்வியடைந்திருக்கிற நிலையில், நேற்றுவரை கூட்டணியில் இருந்துவிட்டு அதுகுறித்து மிகுந்த காட்டமாக விமர்சிப்பது அரசியல் நாகரிகமோ, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமோ அல்ல.
கூட்டணிகள் பிரிவதும், புதிய கூட்டணிகள் உருவாவதும் இயல்பானதுதான்- ஜோதிமணி
Published on

கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நீண்ட காலம் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில பயணித்திருக்கிறது. ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஏற்ற, இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். நானே பொதுவெளியில் முரண்பட்டிருக்கிறேன். இப்பொழுது தமிழ்நாட்டின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக த.வெ.கவுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவை எடுத்துள்ளது.

அரசியலில் கூட்டணிகள் சேர்வதும், பிரிவதும் இயல்பானது தான். திமுக கூட 2014 ல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு வாரம் முன்பு நீண்ட கால கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றியிருக்கிறது. நாங்கள் திடீரென தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதற்காக நாங்கள் திமுகவை காட்டமாக விமர்சிக்கவில்லை. அது ஒரு அரசியல் நிலைப்பாடு என்றே புரிந்துகொண்டோம்.

இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே நாம் பரஸ்பரம் மரியாதையோடு கூட்டணியில் இருந்து பிரிவதுதான் நல்லது. இருபுறமும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக திமுக தேர்தலில் தோல்வியடைந்திருக்கிற சூழ்நிலையில் அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே தோல்வியடைந்திருக்கிற நிலையில், நேற்றுவரை கூட்டணியில் இருந்துவிட்டு அதுகுறித்து மிகுந்த காட்டமாக விமர்சிப்பது அரசியல் நாகரிகமோ, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமோ அல்ல.

காங்கிரஸ் கட்சியும் தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வி அடைந்திருக்கிறோம். அதற்கு தேசிய அளவில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதற்காக யாரும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியை நடத்த முடியாது.

அதே போல எமது தலைவர் ராகுல்காந்திக்கு நாங்கள் யாரிடம் இருந்தும் நற்சான்றிதழை எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டில் பாஜகவின் பாசிச ஆட்சியை சமரசமற்று எதிர்த்து வீழ்த்தக்கூடிய வல்லமை உள்ள ஒரே தலைவர் அவர்தான் என்பதை நாடறியும். அவரை அவதூறு செய்வது யாராக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்கவோ பார்த்துக்கொண்டிருக்கவோ மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அரசியலில் ஏற்கனவே இருந்த கூட்டணிகள் பிரிவதும், புதிய கூட்டணிகள் உருவாவதும் இயல்பானதுதான் என்கிற அரசியல் புரிதலோடு தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும் பாதுகாக்கும் பயணத்தில் முன்னகர்வோம் என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com