

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்டமாக ஜனவரி முதல் 150 படுக்கைகளுடன் செயல்படத் தொடங்கும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று இன்பதுரை எம்.பி. தெரிவித்துள்ளார்.
தென் தமிழக மக்களின் நீண்டநாள் கனவாக மதுரை தோப்பூரில் சுமார் ரூ.2 ஆயிரத்து 21 கோடி மதிப்பீட்டில் 220 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. 2015-ல் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 2019-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை, வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முதற்கட்டமாக 150 படுக்கைகளுடன் தனது சேவையைத் தொடங்கும் என்று அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக மத்திய சுகாதார அமைச்சகத்தால் கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்ட இன்பதுரை எம்.பி., எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, தோப்பூரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து இயக்குநர் அவரிடம் எடுத்துரைத்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இன்பதுரை எம்.பி.,
“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்டமாக ஜனவரி முதல் 150 படுக்கைகளுடன் செயல்படத் தொடங்கும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னை ஐகோர்ட்டில் செப்டம்பர் 17-ந்தேதி, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 2027 ஜனவரி 1-ந்தேதி முதல் முழு அளவிலான வெளிநோயாளி பிரிவு சேவைகள் தொடங்கும் என்று உறுதியளித்திருந்தது. எனினும், உள்நோயாளி பிரிவு எப்போது தொடங்கும் என்பது குறித்த விவரம் அப்போது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
மத்திய அரசின் நிலை அறிக்கையின்படி, செப்டம்பர் மாத இறுதிக்குள் திட்டத் தின் ஒட்டுமொத்தப் பணிகளில் 59 சதவீதம் நிறைவடையும் என்றும், இதில் முதல் கட்டப் பணிகள் 88 சதவீதம் மற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் 35 சதவீதம் நிறைவடைந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பயின்று வந்த 5 எம்.பி.பி.எஸ். மாணவர் குழுக்கள், கடந்த ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் தோப்பூர் எய்ம்ஸ் வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.