

கனமழையால் கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே வங்கக்கடலில் நிலவிய 'முரசு' புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தீவிர புயலாக மாறியது.
இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மற்றும் நரசபூர் இடையே ஒங்கோலுக்கு அருகில் மணிக்கு 100 முதல் 110 வேகத்தில் அதிகாலை 3.30 மணியில் இருந்து 5 மணிக்குள் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக புயல் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் ஓங்கோல் உள்ளிட்ட தெற்கு ஆந்திரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் நள்ளிரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கடலூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 3) விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மற்ற தாலுகாவில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூரில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் இங்கு எதிர்பார்த்தபடி கனமழை இல்லை.