

தமிழக வெற்றிக் கழகம் கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் விஜய் தொடங்க உள்ள “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்றுள்ளார். தாய் மாமனின் அன்பு, ஆதரவு, நம்பிக்கையுமாக இந்த திட்டம் பெண்கள், குடும்ப பாச பந்தங்களை வலுப்படுத்தும் எனவும், குழந்தையின் பிறந்த நாளிலேயே எதிர்கால நலனுக்கான அடையாளமாக அமையும் எனவும் அவர் கூறினார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகம் கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தற்பொழுது “தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை முதலமைச்சர் விஜய் துவங்கி வைப்பது மகிழ்ச்சிக்குரியது.
இத்திட்டம் சமுதாயத்தில் ஒரு தாய் மாமனின் உணர்வு பூர்வமான அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையும் மகளிருக்கு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மகளிருக்கு ஒவ்வொரு குடும்பத்தோடும் ஏற்பட இருக்கின்ற பாசம், பந்தம், நம்பிக்கை அதன் அடிப்படையில் ஏற்படும் நல்லுறவு வலுப்படும்.
அதோடு குழந்தை பிறந்த நாள் அன்றே அவர்களுடைய எதிர்காலம் வசந்த காலமாக மாறுவதற்கு அடையாளமாக இத்திட்டம் திகழும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது.
இத்திட்டத்திற்காக கடந்த ஜூன் மாதம் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க 753.83 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியிருப்பது தமிழக அரசிற்கு மகளிர் மீதும், தான் அளித்த வாக்குறுதி மீதும் தமிழக வெற்றிக் கழக அரசிற்கு இருக்கின்ற அக்கறையையும், பொறுப்பையும் காட்டுகிறது. “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தை இன்று துவங்கி வைப்பதை தமிழ் மாநில காங்கிரஸ் பாராட்டி வரவேற்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.