

தமிழகம் முழுவதும் தோண்டப்பட்டு பாதுகாப்பு இன்றி அரைகுறையாகக் கிடக்கும் அனைத்து வடிகால் பணிகளையும் உடனடியாக சீரமைத்து பணிகளை பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க வேண்டும் எனவும் பொய்க்கால்குதிரை தவெக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே திறந்தவெளியாக விடப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து, இரும்புக்கம்பி தலையில் செருகி 25 வயதே நிரம்பிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
எந்தவொரு மழைநீர் வடிகால் அல்லது சாலையோரப் பணிகள் மேற்கொள்ளப்படும்போதும், அங்கே எச்சரிக்கைப் பலகைகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் தகுந்த தடுப்புகள் (Barricades) அமைத்து விபத்துகள் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்வது அரசின் முதன்மை கடமையாகும்.
முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் குளறுபடிகளாலும், முறையான திட்டமிடல் இன்றி அவசர அவசரமாக மேற்கொள்ளப்படும், உள்கட்டமைப்புப் பணிகளாலும், எந்த நடைமுறைகளும் இங்கு பின்பற்றாத காரணத்தினாலும், எதிர்கால கனவுகள் நிரம்பிய ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் இங்கே பறிபோயிருக்கிறது.
நகராட்சி நிர்வாகத் துறை முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கி வரும் நிலையில், தலைநகர் சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பது என்பது முதலமைச்சர் விஜய் அவர்களின் நிர்வாகத் திறமையின்மையையும் மெத்தனப்போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு தவெக அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் தோண்டப்பட்டு பாதுகாப்பு இன்றி அரைகுறையாகக் கிடக்கும் அனைத்து வடிகால் பணிகளையும் உடனடியாக சீரமைத்து பணிகளை பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க வேண்டும் எனவும் பொய்க்கால்குதிரை தவெக அரசை வலியுறுத்துகிறேன்.