

பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கது தான், ஆனால் சில இடங்களில் பேசினால் தான் தீர்வு காண முடியும் என்றார்.
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராகவும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி என இரு தனித்தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்று ஒருமனதான நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
* புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்கள் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாட்கள் தான்.
* 100 நாள் செயல்திட்டங்களை புதிய அரசு வெளியிடுவது வழக்கம், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதலீடுகள் கிடைக்கும்.
* த.வெ.க.வை போல் ஏற்கெனவே வெள்ளை அறிக்கையை அதிமுக, திமுகவும் வெளியிட்டுள்ளது.
* வெள்ளை அறிக்கையில் மாநில வரி வருவாய் கணிசமாக கசிந்துள்ளதாக தவெக அரசு கூறியுள்ளது.
* 2026-2027 வரி வருவாயை பார்க்கும் போது நிதி மேலாண்மையை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
* அடுத்த 6 மாதங்களில் ரூ.8ஆயிரம் கோடி கிடைக்க வேண்டும் என்றால் அது ஏன் வரி வருவாயில் வரவில்லை?
* நீர் மேலாண்மைக்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
* பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளது.
* மக்களின் கவனத்தை ஈர்க்க கவர்ச்சி வார்த்தைகளே உள்ளன.
* ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாக தரப்படுமா என விளக்கம் அளிக்க வேண்டும்.
* வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை, வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை இல்லை.
* நிதி மேலாண்மைக்கு சரியான பாதை போடப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது.
* 3 மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது தவெக அரசு, இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக உயர்த்தி விடுவீர் என்பதில் சந்தேகமில்லை.
* பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை, அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றியுள்ளீர்கள்.
* மக்கள் பிரச்சனைகளை தீர்க்க புதிய சிந்தனை இல்லை.
* தமிழ்நாட்டில் உள்ள 40 ஆயிரம் அரசு பள்ளிகளிலும் தரமும் உயர்த்தப்பட வேண்டும், அதற்குரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
* அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன் 40,000 பள்ளிகளுக்கும் தேவையான நிதியை கேட்டுப்பெறுவார் என நம்புகிறேன்.
* பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கது தான், ஆனால் சில இடங்களில் பேசினால் தான் தீர்வு காண முடியும்.
* தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்.
என்றார்.