

வ.உ. சிதம்பரம் பிள்ளை 90-வது நினைவு நாளையொட்டி வருகிற 18–ந்தேதி காலை ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ. சி. நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான `கப்பலோட்டிய தமிழன்’, `செக்கிழுத்த செம்மல்’ வ.உ. சிதம்பரம் பிள்ளை 90-வது நினைவு நாளையொட்டி வருகிற 18–ந்தேதி (புதன் கிழமை) காலை 10.30 மணியளவில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ. சி. நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர்கள் என். தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி,ப.மோகன், எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் என்.சின்னதுரை, கழக மகளிர் அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், கொள்கை பரப்பு துணை செயலாலர் சரவணபெருமாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், தூத்துக்குடி வடக்கு (பொறுப்பு) மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் செய்துள்ளார்.
வ.உ.சிதம்பரனாருக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.