தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கும் விஜய்யின் பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம்!- இபிஎஸ்

துறைகள்தோறும் லஞ்ச லாவண்யம் தடையின்றி நடைபெறுகிறது. இதில் ஓர் அங்கம்தான் தற்போதைய மின் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்யும் தந்திரம்.
எடப்பாடி பழனிசாமி
Published on: 
Summary

த.வெ.க. அரசின் அனுபவமின்மை மற்றும் நிர்வாகத் திறமையின்மையால் மின்வெட்டு அதிகரித்து, மக்கள் அவதிப்படுகின்றனர். அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்கள் ஊழலுக்கு வழிவகுக்கின்றன. மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கண்டித்து, உடனடியாக இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏற்கத்தக்கதல்ல!

தமிழகத்தில் எதிர்பாராவிதமாக 5 மாதங்களுக்கு முன் அமைந்த த.வெ.க. கூட்டணி அரசின் அனுபவமின்மை மற்றும் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது! காரணமே இல்லாமல் ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். தமிழக மக்களின் இந்த சிரமங்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு இந்த ஆட்சியாளர்கள் விஞ்ஞான முறையில் ஊழல் செய்ய முனைகிறார்களோ என்ற எண்ணம் மக்களிடம் எழுந்துள்ளது!

மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவது ஒருபுறம்! அனைத்துப் பொருட்களின், குறிப்பாக உணவுப் பொருட்களின் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு மறுபுறம்! இந்த துன்பங்களில் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தையும், அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், கமிஷன் பெற்றுக்கொண்டு கொள்முதல் செய்வதற்கு, செயல் திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல!

அதிர்ச்சி

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், திமுக ஆட்சியின் மிகப்பெரிய அவலமான தொடர் மின்வெட்டை சீர்செய்ய தொடர்ந்து பல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். திமுக ஆட்சியில் பல மின் உற்பத்தித் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதையும், புதிய திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாததையும் கண்டறிந்து, பல புதிய மின் உற்பத்தி திட்டங்களைத் தொடங்கினார். மின் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த குளறுபடிகளை சீர்செய்து தமிழ்நாட்டை மின்வெட்டில்லாத மாநிலமாக மாற்றிக் காட்டினார். தொடர்ந்து, எனது தலைமையிலான அம்மாவின் அரசும், இப்படி தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக விளங்கியது. ஆனால், தற்போதுள்ள திறமையற்ற த.வெ.க. அரசு, அப்படி எந்தவிதமான ஆய்வுகளையும் செய்ததாகத் தெரியவில்லை. மின் உற்பத்தியை அதிகரிக்க எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மின் தொடர் கட்டமைப்பிலும், நிர்வாகத்திலும் பல சீர்கேடுகளை ஏற்படுத்தி, நாள்தோறும் தமிழ்நாட்டின் பல இடங்களில் மின்வெட்டை ஏற்படுத்தி, தமிழகத்தை இருளில் மூழ்கடித்து, தமிழக மக்களை தாங்கொண்ணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

தற்போதைய த.வெ.க. ஆட்சியில், தமிழ்நாடு மின்சார வாரியம் 12.10.2026 முதல் 31.10.2026 வரை தினசரி 4400 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்கு 5 தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளது என்றும்; வரலாற்றிலேயே இல்லாத வகையில் யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 35 ரூபாய் என்ற, மிக மிக அதிக விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது!

கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்தவுடன், யூனிட் ஒன்றுக்கு ரூ.11 முதல் 20 வரை என்று அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டதாகவும்; அதில் ஊழல் நடைபெற்றிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை காரணம் காட்டி அந்த ஒப்பந்தங்களை த.வெ.க. அரசு ரத்து செய்ததாகச் செய்திகள் வெளியாகின. கடந்த ஜூன் மாதம், நீண்ட காலத்திற்கு குறைந்த விலையிலான மின் ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக உறுதியளித்து த.வெ.க. அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. ஆனால், தற்போது பழைய ஒப்பந்தங்களைவிட இரு மடங்குக்கும் மேலான விலையில், இந்த வாடகைக்கால் த.வெ.க. அரசு ஒரு யூனிட்டிற்கு ரூ.32 முதல் ரூ. 37 விலையில் மிக மிக அதிக விலையில், குறுகிய கால ஒப்பந்தத்தை தனியாரிடம் போட்டுள்ளதாக ஊடகச்செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசு அவசர அடிப்படையில் டெண்டர் கோருவதற்கு முன்பே, அதாவது செப்டம்பர் 9-ஆம் தேதியன்றே, ஆந்திர அரசு அக்டோபர் மாத காலத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.16-20 என்ற விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய இறுதி செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இந்த த.வெ.க. அரசு மேற்கொண்ட ரூ. 32-37 என்ற விலையில் வேறு எந்த மாநிலமும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை. மின் பரிமாற்றச் சந்தையில் சராசரி விலை சமீப காலமாக ரூ. 7-10 ஆகவும், இருதரப்பு ஒப்பந்தங்களில் உச்ச நேரத் தேவைக்கான (Peak Hour) சில ஒப்பந்தங்களின் விலை ரூ. 20-க்கு அருகிலும் இருந்தன. இதற்கு முன்பு மத்திய தொகுப்பில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் சராசரியாக யூனிட் ஒன்றிற்கு சுமார் 15 ரூபாய் வரை செலவானதாக வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே, த.வெ.க. ஆட்சிக்கு வந்தவுடன், மின்சார வாரியம் கடன் சுமையால் தள்ளாடுகிறது என்றும், முந்தைய ஆட்சியில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி, மின் கணக்கீட்டில் மாறுதல் செய்கிறோம் என்று ஏற்கெனவே ரூ. 1,500 மின் கட்டணம் செலுத்தி வந்த தமிழக மக்கள், தற்போது சுமார் ரூ.4,000 வரை செலுத்துவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அதிக விலையில் மின் கொள்முதல் செய்ய போடப்பட்ட இந்த ஒப்பந்தம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேலும் கடன் சுமையில் மூழ்கடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த பிரச்சனையைக்கூட அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, கமிஷன் அடித்து அதிக விலைக்கு மின்கொள்முதல் செய்கின்றனர். தூய நிர்வாகம் தருவோம், நேர்மையான நிர்வாகம் தருவோம், தொட்டால் விடமாட்டேன், நான் தொட மாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன் என்று வீர வசனம் பேசியவர்கள் நிர்வாகத்தில், ஆந்திராவின் மணல் மாஃபியாக்களின் தலையீடுகளுடன், தமிழகத்தில் வளங்கள் கொள்ளை போகின்றன. துறைகள்தோறும் லஞ்ச லாவண்யம் தடையின்றி நடைபெறுகிறது. இதில் ஓர் அங்கம்தான் தற்போதைய மின் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்யும் தந்திரம். மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த இவர்களின் நேர்மையின் இந்த இடைத்தேர்தலிலேயே தெரிந்துவிட்டது.

அநியாய விலை

தேர்தலுக்கு முன்பு, தனது சொகுசுப் பேருந்தின் மேல்புறத்தில் இருந்து வசனம் பேசிய நடிகர் விஜய், மின்சார வாரியத்தைப் பற்றி பேசும்போது, எழுதிக் கொடுத்த வசனத்தை, அதாவது ‘டெண்டர்’ என்ற வார்த்தையை மிக அழகாக, தொண்டை நரம்பு தெரிக்கும் அளவிற்கு, ஏற்ற இறக்கத்துடன் பேசி கைதட்டலைப் பெற்று ஆட்சியைப் பிடித்து வாடகைக் கால்களுடன் மைனாரிட்டி ஆட்சியை அமைத்த விஜய், தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சராசரி யூனிட் ஒன்றுக்கு ரூ. 35 வரை அதிக விலைக்கு ‘மின் கொள்முதல் ஒப்பந்தம்’ போட்ட மின் கொள்முதலில் மிகப்பெரிய ‘மெகா ஊழல்’ நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ‘வெற்றி மெகா வசூல் திட்டத்தை’ தொடங்கிவிட்டதாக மக்கள் பரவலாக பேசுகின்றனர்.

ஏற்கெனவே, பல லட்சம் கோடி ரூபாய் கடனில் மிதக்கும் தமிழக மின்சார வாரியத்தை மேலும் கடனில் மூழ்கடித்து, கடைசியில் தனியாருக்கு தாரை வார்க்க இந்த அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அநியாய விலைக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் இந்த ஒப்பந்தத்திற்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த ஒப்பந்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com