எப்போதும் எதிரும் புதிருமாக களம் காணும் இரு துருவக் கட்சியினரும், தங்களின் அரசியல் பாகுபாடுகளை மறந்து பொதுவெளியில் இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்த அரிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சுவாரஸ்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.
அதேநேரத்தில், ரெயில் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் வேல்குமார் சாமிநாதன் தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரே நேரத்தில், மிக அருகருகே நடந்ததால் திமுக - அதிமுக நிர்வாகிகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இரு கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு அங்கே இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த தி.மு.க. மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். பின்னர், ‘அரசியல் அப்புறம், அண்ணா பிறந்தநாள் இப்போது’ என்பது போல, நேருக்கு நேர் கை கொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அதுமட்டுமன்றி, தாங்கள் வைத்திருந்த இனிப்புகளையும் பரஸ்பரம் ஊட்டி மகிழ்ந்தனர்.