அமைச்சர் ஆனந்தை சந்தித்தது ஏன்? - சி.வி.சண்முகம் விளக்கம்

சட்டப்பேரவை வளாகத்தில் த.வெ.க. பொதுச் செயலாளரான அமைச்சர் என்.ஆனந்தை திடீரென சந்தித்து பேசினார்கள்.
CV Shanmugam
Published on

அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் த.வெ.க. பொதுச் செயலாளரான அமைச்சர் என்.ஆனந்தை திடீரென சந்தித்து பேசினார்கள்.

அ.தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வராமல் நீண்டுக் கொண்டே செல்கிறது.

எஸ்.பி.வேலுமணி- சி.வி.சண்முகம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியிடம் இன்னும் சமாதானமாக செல்லாமல் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள்.

எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரை திருப்திப்படுத்தும் விதத்தில் புதிய பதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஆனால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சட்டமன்றத்தில் த.வெ.க. அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.

பின்னர் அவர்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதமும் அளித்தனர். இதன் பிறகும் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கும் இடையேயான பிரச்சனை நீண்டுக் கொண்டே செல்கிறது.

போர்க்கொடி

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரையும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று கோரி இருந்தார். இப்படி தலைமைக்கு எதிராக தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் செயல்பட்டு வரும் நிலைமையிலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமலேயே எடப்பாடி பழனிசாமி பொறுமைக் காத்து வருகிறார்.

எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம்

இந்த நிலையில் அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் த.வெ.க. பொதுச் செயலாளரான அமைச்சர் என்.ஆனந்தை திடீரென சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

சட்டமன்ற வளாகத்தில் வைத்து இன்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்காத நிலையில் அவர்கள் அமைச்சர் என்.ஆனந்தை சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க.வில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து உள்ளனர். இதனால் 6 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் மேலும் சிலர் த.வெ.க. பக்கம் சாயும் வகையில் அமைச்சர் என்.ஆனந்தை சந்தித்து பேசி இருப்பது மீண்டும் அ.தி.மு.க.வில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.பி.வேலுமணி

இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில்,

அத்திக்கடவு அவினாசி திட்டம் தொடர்பாகவும், தொகுதி பிரச்சனைகள் பற்றியும் பேசினோம். தவெகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்த அவர், அதிமுக எங்களுடைய கட்சி என்றும் திட்டவட்டமாக கூறினார்.

சி.வி.சண்முகம்

இந்நிலையில் அமைச்சர் என்.ஆனந்தை சந்தித்தது தொடர்பாக சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

தொகுதி மக்களின் நலனுக்கான கோரிக்கைகளுடன் அமைச்சர் ஆனந்தை சந்தித்தோம். அத்திக்கடவு அவிநாசி திட்டம், தொகுதி சம்பந்தமான கோரிக்கைகளுக்காக அவரை சந்தித்து பேசினோம்.

நான் ஏன் இபிஎஸ்-ஐ சந்திக்க வேண்டும். தேவையற்ற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com