

நம் அரசு யாருக்கும் தனிப்பட்ட அடையாளமாக இருக்காது. 8 கோடி மக்கள் என் சொந்தங்கள். அவர்களுக்கு அடையாளமாகவே அரசு இருக்கும் என முதலமைச்சர் விஜய் பேசினார்.
தமிழக சட்டசபை கூட்டம் 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று காலை கூடியது. சட்டசபையில் கடந்த 3-ந்தேதி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சிகளின் சட்ட மன்ற குழு தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர். இன்று சட்டசபை கூடியதும் அவை முன்னவர் செங்கோட்டையன் எழுந்து பேச தொடங்கினார். அப்போது தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் போட்டனர். முதலமைச்சர் விஜய்யின் இன்றைய பதில் உரை மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் சட்டசபையில் இன்று ஆவேசமாக பதில் அளித்தார்.
அப்போது கடந்த கால தி.மு.க. ஆட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக ஆதாரப்பூர்வமாக முன் வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்ந்து பேச வேண்டாம். இங்கு வன்ம நதி ஓடுகிறது. பெண்களை பற்றி இரட்டை அர்த்தங்கள், 3 அர்த்தங்களை எல்லாம் பேசுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார்கள்.
இதற்கு முன்பு நான் இருந்த இடமும், இப்போது எனக்கு கொடுக்கப்பட்ட இடமும் பெண்கள் கொடுத்ததுதான். பெண்களை பற்றி தேவையில்லாமல் பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.
கடந்த காலத்தில் இதே சட்டமன்றத்தில் மேடம் ஜெயலலிதா இன்றைய எதிர்க்கட்சியால் எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதை கேள்விப்பட்டு உள்ளோம்.
அரசியல் ரீதியாக என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் வன்மம் வேண்டாம்.சட்டசபைக்குள்ளேயே ஒரு உறுப்பினர் எலும்பை உடைப்பேன் என்கிறார். இதுதான் அரசியலா? இது எதற்கு? இதையெல்லாம் மக்கள் பார்த்துதான்... பார்த்து தான்... இன்றைக்கு அந்த பக்கத்தில் (எதிர்க்கட்சி வரிசையில்) அமர்ந்து இருக்கிறார்கள். நான் இதை அறிவுரையாக சொல்லவில்லை. இதுதான் ரியாலிட்டி.
தி.மு.க. மூத்த உறுப்பினர் ஒருவர் தங்களுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவே வராது என்று கூறுகிறார். இதே மக்கள் தானே கடந்த 50, 60 ஆண்டு களாக உங்களுக்கும் வாக்களித்தார்கள்.
2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச்சம்பவங்களை ஒப்பிட்டு கூற மனம் இடம் தரவில்லை. போதைக் கலாச்சாரம் என்ற ஒற்றை வார்த்தையை கூறி தப்பிப்பது அரசின் நல்ல பண்பு அல்ல.
மாணவர்களுக்கு சரியான பாதை இதுவரை வகுத்துத் தரவில்லை என்பது தான் உண்மை. இத்தகைய நிகழ்வுகளை மேம்போக்காக எதிர்கொள்ளாமல் அனைத்து குடும்பங்களில் ஒருவனாக பொறுப்புடன் சிந்தித்து மாணவர் சமுதாயத்தை பொறுப்பானவர்களாக உருவாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். ஊழலற்ற நேர்மையான அரசை வழங்குவதே இந்த அரசின் நோக்கம்.
அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது. அரசு ஊழியர்கள் தங்களின் பணியில் நேர்மையாக இருக்க வேண்டும். அவப்பெயர் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.
மிசாவை பற்றிய வரலாறு அனைவருக்கும் தெரியும். நடந்தது, நடக்க போறது எல்லாத்தையும் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
நம் அரசு யாருக்கும் தனிப்பட்ட அடையாளமாக இருக்காது. 8 கோடி மக்கள் என் சொந்தங்கள். அவர்களுக்கு அடையாளமாகவே அரசு இருக்கும்.
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வோம். தமிழக மக்கள் நலன் ஒன்றே தான் கருத்தில் கொள்வோம் என அன்றே பாடினார் எம்.ஜி.ஆர். அது இவர்களுக்காகதான்.
என் டேபிளில் 3 பைல் இருக்கு என்றேன். அதை ஓபன் பண்றதுக்கு முன்பு ஒரு சாம்பிள் பார்ப்போம். சர்க்காரியா கமிஷனில் உள்ளதை பார்க்கலாம். வீராணம் திட்டத்திற்கு தனி சேப்டர் உள்ளது.
அந்த கால கட்டத்தில் வீராணம் டெண்டர் வேணும் என்றால் 2 சதவீதம் கமிஷன் கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டதாக கூறியுள்ளனர்.
பொன் விழா கண்ட கட்சியின் பவள விழா கண்டது தான்சர்க்காரியா கமிஷன் அறிக்கை.
கலைஞர் மீது எனக்கு பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. எங்கள் அமைச்சர் கருணாநிதி எனக்கூறியதற்கு நான் மன்னிப்பு கேட்டேன். இது எல்லாம் நாங்கள் சொல்லும் குற்றச்சாட்டு இல்லை.
சர்க்காரியா கமிஷனில் அந்த அறிக்கை கொடுத்து இருக்கும் குற்றச்சாட்டு.
இன்று எங்கள் அரசியல் பாரம்பரியம் பற்றி தெரியுமா என்று கூறுபவர்களுக்கு அவர்களை பற்றி மக்களுக்கு தெரிய வைக்க வேண்டாமா?
மிஸ்டர் கிளீன் என சொல்லிக்கொள்கிறார்களே அப்போதே அப்படினா, இப்போ யோசித்து பாருங்கள். பார்ட்டி பண்ட் என்று சொல்லும் போது ஆதாரம் கேட்டார்கள். ஆதாரம் அவர்கள் பக்கத்தில் தான் உள்ளது. (முன்னாள் அமைச்சர் நேருவை நோக்கி கையை காட்டினார்.)
அமலாக்கத்துறை பார்ட்டி பண்டு குறித்து ஆதாரம் கொடுத்து இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்த போது 7.5 முதல் 10 சதவீதம் வரை வாங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
டாஸ்மாக் துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தவறாக அதை பயன்படுத்தினார். அவரது சகோதரர் தலையீடும் இருந்தது. அதுமட்டுமல்ல ரத்தீஷ் என்பவரும் தலையிட்டுள்ளார். அவர் டி.ஆர்.ஒ. உடன் இணைந்து டிரான்ஸ்பர் போன்றவற்றையும் செய்திருக்கிறார். யார் இந்த ரத்தீஷ்? இவர் யாருக்கு நெருக்கமானவர். த.வெ.க ஆட்சி அமைந்த பின் ஏன் துபாய் சென்று ஓடி ஒளிந்துள்ளார்.
போன ஆட்சியில் டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் சில அதிகாரிகளும் உள்ளனர். இந்த ரத்தீஷ் உத்தரவு படி தான் டி.ஆர்.ஒ. மாற்றப்பட்டுள்ளார்.
நம்ம ஆட்சி வந்தவுடன் அவர் வெளிநாட்டில் போய் ஒளிந்துகொண்டார். தி.மு.க. எதை எப்போது செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள் போல. கரூர் கேங். அந்த கேங் தலை வர்கள் யாரு?
விஞ்ஞான ஊழல் குறித்து தெரியுமா? இது தான் அது. ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என்று கேட்டீர்களே? இது போதுமா? இந்த 2 துறையின் ஆதாரத்தை ஓபன் பண்ணதுக்கே இப்படி இருக்கே? ஆதாரம் போதுமா?
தி.மு.க. இருக்கும் இடத்தில் தான் தப்பு நடக்கும்... தி.மு.க. தான் தப்பே செய்யும். ஊழல் என்று சொன்னால் எல்லோரும் எழுந்து கொள்வார்கள்... உடனே ஆதாரம் கேட்பார்கள். இவர்களின் போலி பிம்பமும் போலி பிராண்டும் உடைக்கப்படும்.
நம்ம நண்பர்கள் பேசும் போது ஊழல் என்று பேசினாலே சொன்னாலே உடனே இங்கு எழுந்துடுவாங்க. ஆனால் ஊழல் பண்ணவில்லை என சொல்லமாட்டார்கள். மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.
மக்கள் அன்புக்கு முன் நீங்கள் தோற்பது உறுதி. மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன். இறைவனும் இயற்கையும் மக்களும் நம்மபக்கம் தான் இருப்பாங்க. இங்கே அமைச்சர் ராஜ்மோகன் சொன்னது தான் நியாபகம் வருது. நான் சும்மாவே காட்டு காட்டு காட்டுவேன்.
கூட்டு பொறுப்பை உணர்ந்து அமைச்சர்கள் பதில் சொல்வது இயல்பு தான். மக்கள் அனைவரும் பார்த்து கொண்டு இருப்பதால் 3-ந்தேதி நான் பேசவில்லை. விவரங்கள் எடுத்து வைத்து கொண்டு பேசவேண்டும் என்று தான் அன்று பேசவில்லை.
இந்த ஆட்சியில் திட்டங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் பல தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டங்களை ரத்து செய்துள்ளனர்.
உதாரணம் அம்மா மினி கிளீனிக். அதே போல் 4 வருடம் கழித்து தான் லேப்டாப் கொடுத்தார்கள்.
மக்களை சீரழித்தது போதாது என்று கனிம வளங்களை சீரழித்து இருக்கிறது. தி.மு.க. பல ஆண்டுகளாக தேங்கியுள்ள நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்ய இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கில் எழுந்த சர்ச்சை என்னவென்றால் எப்.ஐ.ஆர். பதியாமலிருந்தது தான். தி.மு.க. ஆட்சியில் கட்சி நிர்வாகிகள் மீது குற்றம் பதிவு செய்யாமல் தடுத்து இருக்கிறார்கள். அதில் சில சாம்பிள் மட்டும் படிக்கிறேன்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காலந்தாழ்த்தி அறிக்கையை சமர்பித்ததற்காக உயர்நீதிமன்றம் விமர்சனம் செய்தது. எங்களது ஆட்சியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலவற்றில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.
முதலமைச்சர் விஜய் பேசும்போது அவரது முகம் கோபத்தில் கொந்தளித்தது. பேச்சும் ஆக்ரோஷமாக இருந்தது.