குழந்தைகள் தின விழா: முதலமைச்சர் வாழ்த்து அட்டையுடன் சென்னையில் 3 லட்சம் மாணவர்களுக்கு கேக்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிளாக் வாரியாக கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு நேற்று முதல் கேக் அனுப்பப்பட்டு வருகிறது.
CM Vijay
Published on: 
Summary

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 62 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்குவதற்கான பணிகள் தொடங்கின. 45 கிராம் எடையுள்ள கேக் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

மறைந்த இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தினமாக நவம்பர் 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவது வழக்கம்.

தரமான கேக்

முதலமைச்சர் விஜய் குழந்தைகள் தினத்தன்று பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கேக் கொள்முதல் செய்யப்பட்டது. தரமான கேக் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.

45 கிராம் கேக்

அதன்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 62 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்குவதற்கான பணிகள் தொடங்கின. 45 கிராம் எடையுள்ள கேக் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. கேக்குடன் முதலமைச்சரின் குழந்தைகள் தின வாழ்த்து அட்டையும் கொடுக்கப்பட உள்ளது. சென்னையில் அரசு, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகள் 890 செயல்பட்டு வருகின்றன. அங்கு படிக்கின்ற சுமார் 3 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிளாக் வாரியாக கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு நேற்று முதல் கேக் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் கேக் பார்சல் சென்றடைந்து விடும்.

தொடக்க விழா

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மாலைக்குள் கேக் மற்றும் முதலமைச்சர் வாழ்த்து அட்டைகள் சென்று விடும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.

குழந்தைகள் தினத்தையொட்டி கேக் வழங்கும் புதிய திட்டத்தை த.வெ.க. அரசு புதிதாக செயல்படுத்துவதால் இதனை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு கேக் வழங்கி வாழ்த்து செய்தியையும் கொடுக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எந்த பள்ளியில் இத்திட்டத்தை தொடங்குவது என்பது குறித்து இன்று மாலையில் முடிவு செய்யப்படும்.

ஆசிரியர்களுக்கு கேக்

மேலும் குழந்தைகள் தின விழா சனிக்கிழமை விடுமுறை தினத்தில் வருவதால் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இத்திட்டத்தை தொடங்கி வைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி முதலமைச்சர் கலந்து கொள்ளும் பள்ளியில் விழா ஏற்பாடுகளை செய்ய தயாராகி வருகின்றனர். மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்கள், பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குழந்தைகள் தின கேக் வழங்கப்பட உள்ளது.

சென்னையில் 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கேக் வழங்கப்படும்.

X