

ரிப்பன் மாளிகையில் மழைபாதிப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்தார்.
அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. வடகடலோர பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகி உள்ளன.
சென்னையில் நேற்று 6 இடங்களில் அதி கனமழை பெய்த நிலையில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னையில் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பதால் இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த அதி கனமழை காரணமாக 280 இடங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் அதனை சரி செய்வதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் சமீரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேங்கிய மழை நீைர வடிய வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக ராட்சத ஜெனரேட்டர்கள் மற்றும் டிராக்டர்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
இதனால் இன்று காலைக்குள் 273 இடங்களில் மழைநீர் முற்றிலுமாக அகற்றப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் சமீரன் தெரிவித்தார். 9 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டது.
சென்னையில் மழைபாதிப்பு பணிகளுக்காக பொறுப்பு அமைச்சர்களை சென்னைக்கு வருமாறு விஜய் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மழைபாதிப்பு முன்னெச்சரிக்கை பணிகள் எவ்வாறு நடக்கின்றன என்பதை பார்வையிட சென்னை மாநகராட்சி இயங்கி வரும் ரிப்பன் மாளிகைக்கு விஜய் வருகை தந்தார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையம் - அவசர கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் துரிதமாக செயல்பட அதிகாரிகளுக்கு விஜய் அறிவுறுதல்களை வழங்கினார்.
விஜய் முதலமைச்சர் ஆன பின் ரிப்பன் மாளிகைக்கு வருவதே இதுவே முதல் முறை ஆகும்.
இதைத்தொடர்ந்து பொறுப்பு அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய், மழைபாதிப்பை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.