

நீர் மேலாண்மை குறித்து கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்த கட்சியினர் யாரும் சிந்திக்கவில்லை. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு நீர் மேலாண்மையில் பின்தங்கி உள்ளது என்று அன்புமணி கூறினார்.
வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று உயிா்நீத்த 21 தியாகிகளின் நினைவை போற்றும் வகையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பா.ம.க. சார்பில் வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது:-
ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ந் தேதி தியாகிகளை நினைவூட்டி அவர்களை போற்றி வருகிறோம். போராட்டத்தில் இறந்தவர்கள் படித்தவர்கள் அல்ல. அவர்களால் இன்று நிறைய இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்கள் பற்றி இன்று வரை மற்றவர்கள் யாரும் பேசவில்லை.
பா.ம.க. சார்பில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டோம். ஆனால் அவர்கள் அதனை நடத்த முன்வரவில்லை.
தற்போது முதலமைச்சராக உள்ள விஜய் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறியுள்ளார். 95 ஆண்டுகளாக காத்து கிடக்கும் எங்களுக்கு முதலமைச்சர் விஜய் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து சாதிகளிலும் உள் ஒதுக்கீடு நிறைய உள்ளது. அதனால் சாதிவாரி கணக்கெடுப்பு தோல்வி அடையாமல் இருக்க முதலமைச்சர் விஜய் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதனால் அதிகம் பயன்பெற போவது பட்டியல் இன பழங்குடியின மக்கள் தான்.
இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் 4 இட ஒதுக்கீடு என 6 இட ஒதுக்கீடு பா.ம.க நடத்திய போராட்டத்தால் தான் கிடைத்தது.
நீர் மேலாண்மை குறித்து கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்த கட்சியினர் யாரும் சிந்திக்கவில்லை. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு நீர் மேலாண்மையில் பின்தங்கி உள்ளது. தண்ணீருக்காக நாம் அடுத்த மாநிலத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக என்ன செய்யப் போகிறார். 2031-ல் நாம் ஆட்சிக்கு வர போகிறோம். அதற்கான சூழ்நிலைகள் நமக்கு அமைந்துள்ளது. எனவே கட்சியில் உள்ளவர்கள் அதனை நோக்கி கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.