

தமிழகத்தில் ஒரே நாளில் 12 கொலைகள் நடந்தது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பண்டிகை காலங்களில் இது சகஜம் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியதற்கு அ.தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்து அரசின் தோல்வியை மறைக்க அமைச்சர் பொறுப்பற்ற கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு.
அ.தி.மு.க. தலைமை கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 படுகொலைகள் நடந்த செய்தி பொதுமக்களின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் இந்த சூழ்நிலையில், இதைப் பற்றி கேள்வி கேட்டால் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் கூறும் பதில் என்ன தெரியுமா?
"பண்டிகை காலங்களில் இதெல்லாம் புதிதல்ல... எதிர்க்கட்சிகள் தான் வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்!" என்ன ஒரு பொறுப்பற்ற, திமிரான பதில்!
பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று ஒரு அமைச்சரே நியாயப்படுத்தலாமா? மக்களின் உயிரைக் காக்க வேண்டிய கடமையில் இருந்து நழுவி, இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்லத் துடிப்பது எந்த வகையில் நியாயம்?
நாட்டின் சட்டம்-ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு அமைச்சரின் இந்த ஒரு பதிலே சான்றாக நிற்கிறது.
கொலைகள் நடப்பது உண்மை: ஆனால் அது எதிர்க்கட்சிகளின் அவதூறா?
மக்களின் பயம் உண்மை,
ஆனால் அது பண்டிகை காலத்து "சாதாரண விஷயமா"?
மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய உயரிய பொறுப்பில் இருக்கும் அமைச்சரே,
தன்னுடைய அரசின் நிர்வாக தோல்வியை மறைக்க இப்படி சாக்குபோக்கு சொல்வதும், எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதும் பொறுப்பற்றத்தனத்தின் உச்சம்!
பட்டிமன்ற புகழ் ராஜ்மோகன் அமைச்சரே... பண்டிகை காலம் என்பது மக்கள் சந்தோஷமாக இருக்கத்தானே தவிர, இரத்தக் களறியைப் பார்த்து அஞ்சி நடுங்க அல்ல!
குற்றங்களைக் கட்டுப்படுத்தத் துப்பில்லாமல், தங்களது அரசின் நிர்வாக கோளாறை மறைக்க அதை நியாயப்படுத்தும் வார்த்தைகளை பேசுவது அமைச்சர் பொறுப்புக்கு அழகல்ல.
இனியாவது வெறும் வாய் வார்த்தை சாக்குபோக்குகளை எல்லாம் நிறுத்திவிட்டு, நாளுக்கு நாள் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க முயற்சியாவது செய்யுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.