

இனி வரும் காலங்களில் நம் மாணவ- மாணவிகள் நம்பிக்கையாக இருங்கள், உறுதியாக இருங்கள் இன்னொரு உயிர் போகக்கூடாது, வெற்றி நம் பக்கம் ஒரு நாள் வரும் என்றார்.
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது :-
இன்றைய தினம் தங்கை அனிதாவின் நினைவு தினம், 2017 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு மாநில பாடத்திட்டத்தில் படித்த அனிதா 1176 மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவப் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண் 196.75 பெற்றிருந்தாலும், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து தன்னுடைய கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று அதில் வெற்றி பெற முடியாத போது, நம்முடைய தங்கை உயிர் மாய்த்தார்
மூன்று முதலமைச்சர்கள் இந்த அவையிலும், திமுக தலைவர் ஸ்டாலினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்றைய முதலமைச்சர் விஜய்யும் நீட்டுக்கு எதிராக இதே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், செவி சாய்க்காத அரசாக மத்திய அரசு உள்ளது.
அண்ணா கனவு கண்ட இருமொழி கொள்கைக்காக போராடி இருக்கிறோம் அண்ணா கனவு கண்ட இட ஒதுக்கீட்டிற்காக போராடி இருக்கிறோம், ஆனால் அனைவரும் சேர்ந்து இந்த நீட்டுக்கு எதிரான போராட்டத்தை வர இருக்கும் காலகட்டத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.
2029 ஆம் ஆண்டு தேர்தல் சூழல் மாறும் பொழுது, அனிதாவின் நினைவு நாளான இன்று பாராளுமன்றத்தில் நீட் தூக்கி எறியப்பட்ட நாளாக ஒரு நாள் மாறும்.
இனி வரும் காலங்களில் நம் மாணவ- மாணவிகள் நம்பிக்கையாக இருங்கள், உறுதியாக இருங்கள் இன்னொரு உயிர் போகக்கூடாது, வெற்றி நம் பக்கம் ஒரு நாள் வரும்,
இந்த உயிரிழப்புகளுக்கு ஒரு நாள் பதில் அளிக்கும் வகையில் அரசியல் சூழல் மாறும், அனிதாவின் கண்ணீருக்கு விடை தேடி நாம் ஒரு அரசியலை மேற்கொள்வோம் என்றார்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் அனிதாவின் குடும்பத்தினர் சார்பாகவும் அனிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்த திட்டமிட்டிருந்தனர். எந்த அரசியல் சார்பும் இல்லாமல் நடத்தப்பட இருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசு மற்றும் சென்னை மாநகர காவல் துறை அனுமதி மறுத்துள்ளனர்.
15 நாட்களுக்கு முன்பாகவே நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறை இதனை ஆர்ப்பாட்டம் என்று கூறி அனுமதி மறுத்துள்ளனர் .
அனிதாவின் சகோதரர் மணி என்னை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
நீட் எதிர்ப்பு மரண தொடர்பாக இந்தியாவில் நேரிட்ட முதல் மரணம் அனிதாவின் மரணம்.
அனிதா மரணம் அடைந்தபோது நம்முடைய முதலமைச்சர் அன்றைக்கு வீட்டில் நேரடியாக சென்று விசாரித்தார்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அன்று சென்றிருந்தார்,
ஆளும் கட்சியும் இன்று நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் ஜனநாயக முறையில் அமைதியாக நடக்க இருந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசாங்கம் அனுமதி மறுத்து இருக்கிறது.
ஏன் அனுமதி மறுத்திருக்கிறது என்ற கேள்வியும் கேட்க விரும்புகிறேன். அனிதாவின் நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதில் கூறியதாவது,
பெசன்ட் நகர் மாதா கோவில் திருவிழா நடைபெறுவதால், இன்னும் சில நிகழ்ச்சிகள் அங்கு நடைபெற உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வேறொரு நாளில் அனுமதி கேட்டால் அனுமதி அது குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும். அனிதாவின் நினைவு நாளான இன்றாவது அரசியல் செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்:-
பெசன்ட் நகர் மாதா கோவில் கொடியேற்றம் கடந்த வாரம் முடிந்துவிட்டது, இத்தோடு செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தான் கூட்டம் வரும் நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் இல்லை.
நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்ததில் அங்கு பெரிய கூட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
நினைவு நாள் நிகழ்ச்சி இன்று நடத்த வேண்டிய சூழல் இருக்கிறது. அதனால் அரசு மாற்று இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:-
உடனடியாக இந்த சூழல் தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுடன் பேசி மாற்று இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.