

சென்னை:
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (‘நீட்’) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்துகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விண்ணப்பித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்துடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்துடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
நீட் போட்டி நுழைவு தேர்வின் நுழைவு சீட்டின் நகல், படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு இந்த தொகை வழங்கப்படும்.
இதில் சிரமம் ஏற்பட்டால் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல் / ஆலோசனை மைய தொலைபேசி எண் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெறலாம் என தெரிவித்துள்ளார். #NEET #TamilnaduGovernment