இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 26,727 பேருக்கு தொற்று

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 122, மகாராஷ்டிராவில் 56 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 277 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,48,339 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,727 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 27,28-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 19 ஆயிரத்துக்குள் இருந்தது. நேற்று முன்தினம் 23,529 ஆக இருந்த நிலையில், நேற்று மேலும் உயர்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 66 ஆயிரத்து 707 ஆக உயர்ந்தது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 9.5 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது. இது ஆகஸ்ட் மாத பாதிப்பைவிட சுமார் 17 சதவீதம் குறைவு ஆகும்.

இதேபோல பலி எண்ணிக்கையும் ஆகஸ்ட் மாதத்தைவிட செப்டம்பர் மாதத்தில் சுமார் 36 சதவீதம் குறைந்திருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 15,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாதிப்பு 11 ஆயிரமாக குறைந்திருந்தது.

நேற்று முன்தினம் 12 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. இதுதவிர மகாராஷ்டிராவில் 3,063, தமிழ்நாட்டில் 1,612, மிசோரத்தில் 1,170, ஆந்திராவில் 1,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 122, மகாராஷ்டிராவில் 56 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 277 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,48,339 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,39,067 பேர் அடங்குவர்.

நேற்றும் பாதிப்பை விட நலம் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்த வகையில் மேலும் 28,246 பேர் மீண்டு வீடு திரும்பினர்.

இதுவரை குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 144 ஆக உயர்ந்தது. தற்போது 2,75,224 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே நேற்று 15,20,899 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 57.04 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com