உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு யார் காரணம்? மா.சுப்பிரமணியத்துக்கு சைதை துரைசாமி கேள்வி

உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு யார் காரணம்? என்று மா.சுப்பிரமணியத்துக்கு சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு யார் காரணம்? மா.சுப்பிரமணியத்துக்கு சைதை துரைசாமி கேள்வி
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மா.சுப்பிரமணியன் மேயராக இருந்த போது சுமார் 450 பூங்காக்கள் உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். அவருக்குப் பிறகு நான் 2011-ம் ஆண்டு மேயர் பதவிக்கு வந்தபோது சென்னையில் மொத்தமே 260 பூங்காக்கள் மட்டுமே இருந்தன.

என்னுடைய மேயர் காலத்தில் 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 300 புதிய பூங்காக்கள் உருவாக்க திட்டமிடப்பட்டது. என் பதவிக்காலம் முடிவடையும் போது 266 புதிய பூங்கா பணி நிறைவடைந்து மொத்தம் சென்னையில் 526 பூங்காக்கள் இருந்தன. மீதமுள்ள பூங்கா பணிகளும் தற்போது நிறைவடைந்து வருகின்றன.

அவர் எழுதிய, ‘மேயர் அல்ல பொறுப்பு’ என்ற புத்தகத்தில் கூட, சென்னையில் சுமார் 236 பூங்காக்கள் இருந்தன என்றும் கூவம் கரையோரம் இரண்டு புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டன என்றும் சீரமைப்பு செய்யப்பட்ட மற்றும் புதிய 58 பூங்காக்கள் திறக்கப்பட்டன என்று மட்டுமே தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில் புதிதாக 450 பூங்காக்கள் உருவாக்கியதாக எங்கும் பதிவு செய்யவில்லை.

உண்மை இப்படி இருக்கும் போது, 450 பூங்காக்கள் உருவாக்கியதாக தவறான தகவல் சொல்வது வரலாற்றுப் பிழை. அதே போன்று, மாநகராட்சி பெயரில் உள்ள சொத்துக்களை யாரும் தாரை வார்க்க முடியாது. யாரும் சொந்தம் கொண்டாடவும் முடியாது.

மாநகராட்சியின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக அரசு மற்றும் மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு கடுமையான நிபந்தனைகளுடன் ஓட்டல், வங்கி, மருத்துவமனை, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு மட்டுமே பூங்காக்கள் ஒப்படைக்கப்பட்டன.

உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்று வருத்தப்படும் மா.சுப்பிரமணியன், இந்த தேர்தல் நடைபெறாமல் போனதற்கு யார் காரணம் என்பதை சொல்ல மறந்துவிட்டார்.

தேர்தல் அறிவிப்பு செய்தபிறகு தடையாணை பெற்றதால்தானே மக்கள் பிரதிநிதிகள் இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் நாடகமாடுவது தி.மு.க.தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com