எங்களுக்கு ரஜினியை கண்டு பயமில்லை: தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பேட்டி

அ.தி.மு.க., தி.மு.க.வையே எதிர்த்த எங்களுக்கு ரஜினியை கண்டு பயமில்லை என தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி பேட்டியளித்துள்ளார்.
எங்களுக்கு ரஜினியை கண்டு பயமில்லை: தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பேட்டி
Published on

தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கரூர் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி மாலை மலருக்கு அளித்த சிறப்பு பேட்டி விபரம் வருமாறு:-

கேள்வி: கட்சி வளர்ச்சிப் பணிகள் எவ்வாறு உள்ளது?

பதில்: தற்போது கட்சியின் உட்கட்சி தேர்தல் நடக்கிறது. ஊராட்சி, ஒன்றியம், பேரூர் அளவில் கிளைக்கழக நிர்வாகிகள் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக ஒன்றிய, பேரூர், நகர, மாநகர செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதற்கடுத்து மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் நடக்கும்.

கேள்வி: தமிழக அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?

பதில்: கடந்த 6 மாதமாக அ.தி.மு.க. ஆட்சியில் எந்த செயல்பாடும் இல்லை. 2016-க்கு பின்னர் உருப்படியான எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்படுகிறது. ஆட்சியை பாதுகாக்கவும், பதவியை தக்க வைக்கவும் மட்டுமே போட்டா போட்டி நடக்கிறது. தமிழக மக்களின் குறைகளை பற்றி யோசிக்க அவர்களுக்கு நேரமில்லை. அ.தி.மு.க.வில் தற்போது 3 அணிகள் உள்ளன. அது விரைவில் 5 அணி ஆகலாம்.

கேள்வி: தமிழக அரசை பா.ஜ.க. இயக்குவதாக எதிர் கட்சிகள் குற்றஞ்சாட்டுவது குறித்து?

பதில்: நானும் அப்படித் தான் நினைக்கிறேன்.

கேள்வி: சமீபத்திய ஒரு கருத்துகணிப்பில் மு.க. ஸ்டாலினுக்கு 38 வாக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு 23 வாக்கும், கட்சி தொடங்காத ரஜினிக்கு 21 சதவீத வாக்கும் இருப்பதாகவும், தே.மு.தி.க.வுக்கு ஒற்றை இலக்க வாக்கு சதவீதம் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதே?

பதில்: ரஜினிகாந்த் அரசியல் கட்சியே தொடங்கவில்லை. அப்படியென்றால் விஜய், அஜீத் என வரிசையாக கருத்து கேட்டிருக்க வேண்டியது தானே.

கேள்வி: தமிழர்கள் மட்டுமே தமிழ்நாட்டை ஆள வேண்டும். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என சில அரசியல் கட்சி தலைவர்கள் கூறுகிறார்களே?

பதில்: எங்கள் தலைவர் விஜயகாந்த் இந்த கேள்விக்கு பதிலளித்து விட்டார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தமிழ், தமிழ் என சொல்லிக்கொண்டு ஆட்சி செய்த தி.மு.க. தமிழகத்திற்கு என்ன செய்தது? மக்களை பாதிக்கும் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டார்கள்.

மற்றபடி ரஜினிகாந்த் அரசியலுக்குள் வந்தால் மட்டுமே அதில் இருக்கும் கஷ்டம் அவருக்கு தெரியும். இதுவரை அவர் தமிழக மக்கள் பிரச்சனைக்காக என்ன போராட்டம் நடத்தினார்? ஆனால் எங்கள் தலைவர் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் முன்பே காவிரி, இலங்கை பிரச்சனைகளுக்காக போராடினார். கார்கில் நிதி வழங்கினார். பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து அளித்து வந்திருக்கிறார்.

கேள்வி: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தே.மு.தி.க.வுக்கு பாதிப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறதே?

பதில்: அவர் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இப்போதும் உண்மை தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அ.தி. மு.க.-தி.மு.க.வையே எதிர்த்த எங்களுக்கு ரஜினியை கண்டு பயமில்லை.


கேள்வி: ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி. மு.க.வினர் ஒருவர் கூட பெயர் சொல்லும் அளவுக்கு உங்கள் கட்சியில் இணையவில்லையே?

பதில்: முன்னாள் மந்திரிகள் இங்கு வருவதால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை. அதனை தலைவரும் விரும்பவில்லை. அ.தி.மு.க. தொண்டர்கள் தே.மு.தி.க.வுக்கு வருகிறார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

கேள்வி: தே.மு.தி.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில்: தே.மு.தி.க. விரைவில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com