

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரி,சிஜேபி சார்பில் மும்பை சிவாஜி பூங்காவில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் வித்தியாசமான வாசகங்கள் மற்றும் மீம்ஸ் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியபடி இளைஞர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் சிஜேபி, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
சிவாஜி பூங்காவில் நடைபெற்ற போராட்டத்தில், Gyanesh Must Go, Go Gyanu Go உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகள் கவனம் பெற்றன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் பல்வேறு மீம்ஸ் மற்றும் கார்ட்டூன் வடிவிலான பதாகைகளையும் போராட்டக்காரர்கள் காட்சிப்படுத்தினர்.
சமூக வலைதளங்களில் ஏற்கனவே வைரலான மீம்ஸ் மற்றும் வாசகங்கள் போராட்டக் களத்திலும் இடம்பெற்றதால், போராட்டம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
மும்பை போலீசார் சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்திருந்த நிலையில், சிஜேபி சார்பில் இன்று ஜெயில் பரோ அந்தோலன் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. போராட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், திட்டமிட்டபடி போராட்டமானது தொடங்கியுள்ளது.
ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், தேர்தல் வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சிஜேபி முன்வைத்துள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள போலி, இரட்டை வாக்காளர் பதிவுகள் மற்றும் தகுதியற்ற பதிவுகளை நீக்குவதற்கான நடவடிக்கையே என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையே, இசையமைப்பாளரும் பாடகருமான விஷால் தத்லானி இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ‘Go Gyanu Go’ என்ற முழக்கத்துடன் அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.
மேலும், மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெறும் போராட்டத்தில் தானும் பங்கேற்பதாக விஷால் தத்லானி தெரிவித்திருந்தார்.
மேலும் நடிகர் நசிருதீன் ஷா மும்பையில் சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கேவை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான இந்த போராட்டம், மும்பையில் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.