ஆம்னி பஸ்களை சாலையின் குறுக்கே நிறுத்தி திடீர் போராட்டம்

சில பயணிகள் அதிகாரிகளுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆம்னி பஸ்களை சாலையின் குறுக்கே நிறுத்தி திடீர் போராட்டம்
Published on: 
Summary

அதிகாரிகளின் நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த டிரைவர்கள் ஆம்னி பஸ்களை சோதனைச்சாவடி அருகே சாலையின் குறுக்கே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தினர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் நவீன ஒருங்கி–ணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இது தமிழக-ஆந்திர எல்லைப்பகுதிக்கான மிக முக்கியமமான சோதனை சாவடி ஆகும். இந்த சோதனைச்சாவடியை கடந்து தான், ஆந்திர, தெலுங்கனா மற்றும் வட மாநில வானங்கள் தமிழகத்தில் நுழையும். தினந்ேதாறும் அதிகாலை நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட தனியார் சொகுசு ஆம்னி பஸ்கள் தெலங்கானா, ஆந்திரா மற்றும் வட மாநிலஙகளில் இருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றி வருவது வழக்கம்.

போக்குவரத்து துறை

இந்த நிலையில் இன்று காலை 5 மணி முதல் சோதனைச்சாவடியில் உள்ள போக்குவரத்து துறையினர் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வடமாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த 10-க்கும் மேற்பட்ட தனியார் சொகுசு பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

ஆம்னிபஸ்கள்

அப்போது ஆம்னிபஸ்கள் உரிய மாநில வரியை செலுத்துவதில் நிலுவைத்தொகை இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அனைத்து ஆம்னி பஸ்களையும் போக்குவரத்து சோதனைச்சாவடி அதிகாரிகள் அங்கேயே நிறுத்தினர்.

பயணம்

மேலும் அதில் பயணம் செய்து வந்த பயணிகளை நடு வழியில் வலுகட்டாயமாக இறக்கினர். அவர்களை மாற்று பஸ்சில் சென்னை செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்–பட்டனர். சில பயணிகள் அதிகாரிகளுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு மாநில தொடாபான வரி பிரச்சனையை கண்டறிந்து முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காமல் பஸ்சை நடுவழியில் நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்பினர்.

டிரைவர்கள்

இதற்கிடையே அதிகாரிகளின் நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த டிரைவர்கள் ஆம்னி பஸ்களை சோதனைச்சாவடி அருகே சாலையின் குறுக்கே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆம்னி பஸ்கள் மாநில வரி பாக்கி என்றால் உரிமையாளர்களுக்கு தகவல் சொல்லி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று டிரைவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.

போலீசார்

தகவல் அறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பஸ் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மாநில வரி கட்டணத்தை கால அவகாசத்துடன் கட்ட அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு ஆம்னி பஸ்கள் அங்கிருந்து சென்னை நோக்கி புறப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com