

பராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 30-ந்தேதி (நாளைமறுநாள்) தொடங்கி 4 நாள் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதாவை இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் கடுமையாக எதிர்த்து வந்தன. தற்போது திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
என்றாலும் காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் "முதலில் வாக்கு திருட்டு, இப்போது தொகுதி திருட்டு, தொகுதி மறுவரையறை சதி மூலம் பிரதமர் மோடி அதிகாரத்தை தக்க வைக்க துடிக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளது.