

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில், நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறும் செய்திகளும் இந்தியக் கலாச்சாரத்திற்கும் தத்துவத்திற்கும் புத்துணர்வை அளிக்கின்றன. கிருஷ்ணர் சத்தியம், நேர்மை, நீதி, கருணை மற்றும் தன்னலமற்ற செயல் ஆகியவற்றின் பாதையைக் காட்டினார். ஸ்ரீ கிருஷ்ணரின் கொள்கைகளை அனைவரும் ஏற்றுக்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ச்சி பெற்ற இந்தியாவை கட்டியெழுப்புவதற்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த ஜென்மாஷ்டமி நல்வாழ்த்துகள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகச் செய்திகளில் தன்னலமற்ற செயலுக்கான ஆழ்ந்த உத்வேகம் அடங்கியுள்ளது, அதுவே மனிதகுலத்தை தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. அவரது பக்திக்கும் வழிபாட்டிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனிதமான நன்னாள், அனைவரின் வாழ்விலும் நேர்மறை ஆற்றலையும் வலிமையையும் ஊட்ட வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! என்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
'ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி' எனும் புனிதத் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
அறம், நீதி மற்றும் பொதுநலத்தின் அடையாளமாகத் திகழும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அனைவர் மீதும் தொடர்ந்து தனது அருளைப் பொழியட்டும். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! என்று தெரிவித்துள்ளார்.