

உலகில் அநீதி தலைதூக்கும் போதெல்லாம், தர்மத்தை நிலைநாட்ட இறைவன் பூமியில் அவதரிப்பான் என்பது பகவத்கீதையின் உபதேசம் ஆகும். அதன்படி, திருமாலின் அவதாரமான கிருஷ்ணரின் வாழ்க்கை, மக்களின் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். தெய்வீக குணங்கள் முழுமையாக வெளிப்பட்ட அவதாரம் என்பதால், கிருஷ்ணரின் அவதாரம் 'பூர்ணவதாரம்' (முழுமையான அவதாரம்) என்று கருதப்படுகிறது.
கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த தினத்தில், நள்ளிரவு வேளையில் மதுரா நகரச் சிறைச்சாலையில் தேவகி - வசுதேவரின் எட்டாவது மகனாக கிருஷ்ணர் அவதரித்தார். கொடுங்கோலன் கம்சனை வதம் செய்து, உலகில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் கண்ணனாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
கண்ணன் பிறந்ததும், தந்தையான வசு தேவர் அவரை தலையில் சுமந்தபடி, நள்ளிரவில் கொட்டிய பெருமழையையும் பொருட்படுத்தாமல் யமுனை நதியைக் கடந்து ஆயர்பாடியில் உள்ள நந்தகோபர் -யசோதையின் இல்லத்தில் சேர்த்தார். அங்கு வளர்ந்த பாலகிருஷ்ணர், தனது பிஞ்சுப் பருவத்திலேயே எண்ணற்ற லீலைகளைப் புரிந்து அனைவரது உள்ளங்களையும் கொள்ளைக்கொண்டார்.
கிருஷ்ணரின் வசீகரமான புல்லாங்குழல் இசையால் மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் ஈர்க்கப்பட்டன. வெண்ணெய் திருடி உண்பது, ஆயர்குலச் சிறுவர்களுடன் விளையாடியது என அவரது குழந்தைப் பருவம் குறும்புதனங்கள் நிறைந்தவை. அதேவேளையில், தன்னை அழிக்க வந்த பல்வேறு அசுரர்களை அழித்து மக்களைக் காத்தார்.
கிருஷ்ணரின் வேண்டுகோளின் படி, தனக்குச் செய்யவேண்டிய வழிபாடு மறுக்கப்பட்டதால், கோபமுற்ற இந்திரன் கோகுலத்தில் பெருமழையைப் பொழிவித்தபோது, கிருஷ்ணன் கோவர்தன மலையை தன் சுண்டு விரலால் குடை போலத் தூக்கி, மக்களை பாதுகாத்தார். பின்னர் மதுராவுக்குச் சென்று கம்சனை வதம் செய்து, தர்மத்தை நிலைநாட்டினார். இவ்வாறு குழந்தைப் பருவத்திலேயே தமது தெய்வீக ஆற்றலால் உலகைக் காத்த கண்ணன், பக்தர்களின் உள்ளங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்த இறைவனாகத் திகழ்கிறார்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில், கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டின் நுழைவாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவினால் குழந்தை கிருஷ்ணரின் திருவடிகளை வரைந்து, "கண்ணன் நம் வீட்டிற்குள் எழுந்தருளுகிறார்” என்ற நம்பிக்கையுடன் அவரை வரவேற்பார்கள். வீடுகளையும், பூஜை அறைகளையும் மலர்கள் மற்றும் மாவிலைத் தோரணங்களால் அழகுபடுத்தி, கிருஷ்ணரின் திருவுருவத்துக்கு புத்தாடை அணிவித்து, நெற்றியில் திலகம் சாற்றி வழிபடுவர்.
கண்ணனுக்கு உகந்ததாகக் கருதப்படும் வெண்ணெய், தயிர், அவல், சீடை, முறுக்கு, அப்பம், நாவல் பழம் உள்பட பல்வேறு நைவேத்தியங்களைப் படைத்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள். கோவில்களில் உறியடித் திருவிழாவும், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் மிகுந்த உற்சாகத்துடன் நடத்தப்படும். குழந்தைகள், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து கண்ணனின் லீலைகளை நினைவூட்டும் வகையில் மகிழ்ச்சியாக உலா வருவர்.
மேலும், சில பகுதிகளில் உயரத்தில் கட்டப்பட்ட தயிர்க்குடத்தை இளைஞர்கள் குழுவாகச் சேர்ந்து உடைக்கும் 'தஹி ஹண்டி விழாவும் களைகட்டும். இவ்வாறு பக்தி, மகிழ்ச்சி, பாரம்பரியம் ஆகியவை ஒன்றிணைந்து, கிருஷ்ண ஜெயந்தி விழாவைச் சிறப்பிக்கின்றன.
கிருஷ்ண ஜெயந்தி என்பது ஒரு அவதாரத்தின் பிறப்பைக் கொண்டாடும் விழா மட்டுமல்ல; அன்பு, பக்தி, தர்மம், கடமை ஆகியவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் புனித நாளாகும். தர்மத்தின் வழிகாட்டியாக விளங்கிய கண்ணனின் திருவடிகளைப் போற்றி, அவரது அருளையும் நல்லெண்ணத்தையும் நம் வாழ்வில் வளர்ப்போம்.