பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரி கைது: லாகூரில் தீவிரமடையும் அரசியல் பரபரப்பு

போராட்டத்தைத் தடுக்கும் நோக்கில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கண்டிப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
Aleema Khan
Published on
Summary

இம்ரான்கானை உடனடியாக விடுவிக்க கோரி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் செப்டம்பர் 27-ஆம் தேதி தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்று பிரமாண்ட போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது விடுதலையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த அவரது சகோதரி அலீமா கான், லாகூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்தை காட்டி, 'பஞ்சாப் பொது ஒழுங்கு பராமரிப்பு சட்டத்தின்' கீழ் அவரை 30 நாட்கள் காவலில் வைக்க லாகூர் துணை கமிஷனர் முகமது அலி இஜாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அலீமா கான் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைக்கு மாற்றப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்.

இம்ரான்கானை உடனடியாக விடுவிக்க கோரி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் செப்டம்பர் 27-ஆம் தேதி தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்று பிரமாண்ட போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகளை அலீமா கான் முன்னின்று கவனித்து வந்த சூழ்நிலையில் இந்த திடீர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்தைத் தடுக்கும் நோக்கில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கண்டிப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பி.டி.ஐ. கட்சியின் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் காவல் துறையினர் கைது செய்து காவலில் வைத்து வருகின்றனர்.

பி.டி.ஐ. கட்சி கண்டனம்

அலீமா கானின் கைதை பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது. "சகோதரனின் உரிமைக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுத்த ஒரு சகோதரி பழிவாங்கப்படுகிறார்" என்று அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ஷேக் வகாஸ் அக்ரம் தெரிவித்துள்ளார்.

மேலும், அலீமா கானின் மகன் ஷாரெஸ் கான் தனது தாயாரை காவல் துறை ரகசியமாக அழைத்து சென்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் நீதிமன்ற பிணை பெற்றுள்ள நிலையில், சட்டவிரோதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அவரது தற்போதைய நிலையை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தீவிரமடையும் பாகிஸ்தான் அரசியல் சூழல்

கடந்த சில மாதங்களாகவே இம்ரான்கானைச் சிறையில் சந்திக்க அவரது குடும்பத்தினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது செப்டம்பர் 27 போராட்டத்திற்கு முன்னதாகவே இம்ரான்கானின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வருவது பாகிஸ்தான் அரசியலில் பெரும் கொந்தளிப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com